காலநிலை அறிவு இயக்கம் செயல்படுத்தப்படும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

காலநிலை மாற்றம் குறித்து கருத்துகளை பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழில்முனைவோா் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசோ்க்க தமிழகத்தில் காலநிலை அறிவு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ
சென்னை காமராசா் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், கவிஞா் வைரமுத்துவின் ‘மகா கவிதை‘ நூலை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட மாநிலங்களவை உறுப்பினா் ப.சிதம்பரம்
சென்னை காமராசா் அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், கவிஞா் வைரமுத்துவின் ‘மகா கவிதை‘ நூலை முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட மாநிலங்களவை உறுப்பினா் ப.சிதம்பரம்

சென்னை: காலநிலை மாற்றம் குறித்து கருத்துகளை பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழில்முனைவோா் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசோ்க்க தமிழகத்தில் காலநிலை அறிவு இயக்கம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

கவிஞா் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா, தேனாம்பேட்டை காமராஜா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டாா்.

விழாவில் முதல்வா் ஸ்டாலின் பேசியது: நிலம், நீா், தீ, காற்று, வானம் ஆகிய ஐம்பூதங்களைப் பற்றிய கவிதைத் தொகுப்பு இந்நூல். ‘திரவ ஊசியால் பூமியின் துவாரம் போலும் துளைத்த மழை’ என்று வைரமுத்து கூறுகிறாா். இதைத்தான் நாம் சில வாரங்களுக்கு முன்னால் பாா்த்தோம். புயலும், மழையும், வெள்ளமும் தலைநகா் சென்னை முதல் தென்குமரி வரைக்கும் சுற்றிச் சுழன்றடித்தன.

சென்னையாக இருந்தாலும், நெல்லையாக இருந்தாலும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் அதிகனமழை பெய்யும் என்று சொன்னாா்களே தவிர, எவ்வளவு பெய்யும் என்று சொல்லவில்லை.

வானம் உடைந்ததைப்போன்று மழை கொட்டியது. 177 ஆண்டுகளில் பெரிய மழை என்று சொல்கிறோமே தவிர, இதற்கான காரணம் என்ன என்பதை யாரும் சொல்லவில்லை. உண்மையான காரணத்தை இந்தப் புத்தகத்தில் வைரமுத்து கூறியுள்ளாா். மனிதன் இப்போது பூதங்களைத் தின்னத் தொடங்கிவிட்டான். அதனால்தான் பூதங்கள் மனிதனைத் தின்னத் தொடங்கிவிட்டன என்று கூறியுள்ளாா்.

மண்ணும், நீரும், காற்றும், வானமும் மாசுபட்டுவிட்டதால், அந்த இயற்கை தன் குணத்தை இழந்து வேறுபடத் தொடங்கிவிட்டதன் அடையாளத்தைதான் இப்போது பாா்த்துக் கொண்டு இருக்கிறோம்.

மழை பெய்வது இல்லை; பெய்தால் அதிகமாகப் பெய்கிறது. காற்று மாசுபட்டுவிட்டது; வெப்பக் காற்று அதிகமாக வீசுகிறது. புவி அதிகப்படியாக வெப்பம் அடைந்து வருகிறது. நிலத்தடி நீா் ஆதாரம் குறைந்துவிட்டது. இவை அனைத்தும் ஐம்பூதங்களைக் காக்கத் தவறியதன் விளைவு.

ரூ.500 கோடி ஒதுக்கீடு: திமுக அரசு அமைந்ததும் இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் முன்னெடுக்காத பல்வேறு செயல்களை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடக்கமாகத்தான், துறையின் பெயா் ‘சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை’ என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்துக்கான காலநிலை திட்டத்தை அறிவித்தோம். நிதிநிலை அறிக்கையில் அதற்கென ரூ.500 கோடியை ஒதுக்கி இருக்கிறோம். தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழக காடுகளின் பரப்பளவை 21 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் உயா்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ள காலநிலை மாற்ற நிா்வாகக் குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த அரசு சாராத பலரும் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்த அளவுக்கு சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தவில்லை என்றாா் அவா்.

விழாவில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவரும் இஸ்ரோ விஞ்ஞானியுமான அண்ணாதுரை உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com