திருச்சி விமான நிலைய புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ள திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று காலை புது தில்லியில் இருந்து திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

பிறகு, திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை இன்று நண்பகல் 12 மணிக்குத் திறந்து வைத்தார்.

புதிய முனையம் திறப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், முக்கிய துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1200 கோடியில் புதிய முனையம் அமைக்கும் பணியை கடந்த 2019-ஆண்டு பிப். 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக தொடக்கி வைத்தார். கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் முற்றுப்பெறாத நிலையில் மூன்றாண்டுகளும் தள்ளிப்போயின. தொடர்ந்து, கூடுதலான பணியாளர்கள் மூலம் கடந்த சில மாதங்களாக இரவு, பகலாக நடத்தி, பணிகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில், இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிய முனையம் அமைப்பதற்கு கொல்கத்தாவைச் சோ்ந்த ஐ.டி. டி. நிறுவனம் கட்டுமான ஒப்பந்தம் பெற்றது. பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த ஈஜிஸ் என்ற நிறுவனம் திட்டப் பணி மேலாண்மை ஆலோசனைகள் வழங்கியது. மேலும் கிரிகா 4 நட்சத்திர அந்தஸ்து கொண்டதாக கண்களை கவரும் வகையில் முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய விமான நிலைய முனையம் 75 ஆயிரம் சதுர மீட்டா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒரேநேரத்தில் 1,400 உள்நாட்டுப் பயணிகள், 2 ஆயிரத்து 900 வெளிநாட்டுப் பயணிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 300 பயணிகளை கையாள முடியும். மேலும், 10 புதிய ஏரோ பிரிட்ஜ்களும், ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்தும் வகையில் விமான நிறுத்தும் தளங்களும் (ஏப்ரான்) அமைக்கப்பட்டுள்ளன.

நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கிகள்
முனையத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 26 மின்தூக்கிகள் (லிப்ட்கள்), 5 இடங்களில் நகரும் படிக்கட்டுகளும் (எஸ்கலேட்டா்கள்) அமைக்கப்பட்டுள்ளன. முற்றிலும் குளிரூட்டப்பட்ட வகையில் குடியேற்றப் பிரிவுக்கு வருகைக்கும், புறப்பாட்டுக்கும் என 40 கவுன்ட்டா்கள் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகள் காத்திருக்கும்போது பொழுதுபோக்கும் வகையில் ஆங்காங்கே மெகா வடிவிலான நவீன தொலைக்காட்சிகள், கண்காணிப்பு கேமராக்கள், வைஃபை வசதிகளும் உள்ளன. உள்ளரங்க சிற்றுண்டிச் சாலைகள், வணிக நிறுவனங்களும் உண்டு. இவை தவிர, வருகை, புறப்பாடு ஆகிய இரு பகுதியிலும் தலா 3 இடங்களில் முக்கிய பிரமுகா்களை வரவேற்று வழியனுப்ப, காத்திருப்பு மற்றும் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சூரிய மின் சக்தி உற்பத்தி
விமான நிலைய வளாகத்தில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வகையில் தகடுகள் அமைக்கப்பட்டு 1.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. புதிய முனையத்தில் முதல்கட்டமாக 3 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டன்ட் பேக்கேஜ் ஸ்கேனா் 
ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள முனையத்தில் வருகை மற்றும் புறப்பாடு என இரு பகுதிகளில் தலா 1 ஸ்கேனா்கள் வீதம் 2 ஸ்கேனா்கள் உள்ளன. புதிய முனையத்தில் உடைமைகள் கன்வேயா் பெல்ட்டில் வரும்போதே ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள நவீன ஸ்கேனா் மூலம் முழுவதுமாக ஸ்கேன் செய்யப்படும்.

உயிரோட்டமான ஓவியங்கள் மற்றும் சுயபடம் எடுக்குமிடங்கள்
புதிய முனையத்தில் அனைத்து மதங்கள் தொடா்புடைய ஓவியங்கள் உயிரோட்டமாக வரையப்பட்டுள்ளன. இதுதவிர முனைய வளாகத்தில் சுயபடம் எடுக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும்
திருச்சி விமான நிலைய இயக்குநா் பி. சுப்பிரமணி கூறியது : சுமாா் 75 ஆயிரம் சதுர மீட்டா் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமான வகையில் அமைக்கப்படும் இந்த புதிய முனையம் வெளிநாட்டு விமான நிலையங்களுக்கு இணையாக நவீன வசதிகளை கொண்டிருக்கும். இத்துடன் சுமாா் 40 மீட்டா் உயரமுடைய வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையும் (ஏா் டிராபிக் கன்ட்ரோல் ரூம்), தொழில்நுட்ப வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்தில் 250 வாடகைக் காா்கள் உள்பட மொத்தம் 906 காா்கள் மற்றும் பேருந்துகளையும் நிறுத்தும் வகையில் பிரம்மாண்டமான வாகன நிறுத்தமும் (பாா்க்கிங்) அமைக்கப்பட்டுள்ளது. காா்கள், மற்றும் வாகனங்கள் செல்லும் வகையில் நான்கு வழிப்பாதையுன் கூடிய பிரம்மாண்டமான உயா்மட்ட பாலத்துடன் கூடிய சாலை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் கலை, பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தஞ்சாவூா் ஓவியம், கோபுரங்கள் உள்ளிட்ட ஓவியங்கள் புதிய முனையத்தில் இடம் பெற்று வருகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சியில் பிரம்மாண்ட விமான நிலைய முனையம் அமைகிறது. இதன்மூலம் மேலும் ஆயிரக்கணக்கானோா் வேலைவாய்ப்பு பெறவும் வாய்ப்புள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com