தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அரசு: டிடிவி தினகரன்

ஆட்சி அதிகாரம் இருந்ததால் மக்களை ஏமாற்றி வந்த துரோகிகளுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டிய காலம் நெருங்கிவிட்டது. மக்களோடு சேர்ந்து அவர்களுக்கு சாவுமணி அடிக்க வேண்டும் என்று தினகரன்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது திமுக அரசு: டிடிவி தினகரன்
Published on
Updated on
2 min read



வேலூர்: எடப்பாடி பழனிசாமியின் ஊழல் ஆட்சி மீது கோபப்பட்ட மக்கள், விடிவு வரும் என நினைத்து திமுவிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தார்கள், ஆனால் தேர்தல் கால வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டு விடியா ஆட்சியை  நடத்தி வருகிறது திமுக அரசு. இதற்கு எல்லாம் மாற்று சக்தியாக அமமுகவை வரும் காலங்களில் மக்கள் ஆதரிப்பார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய வருவாய் மாவட்டத்திற்கு உள்பட்ட அமமுக பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் புதன்கிழமை வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கட்சி தொண்டர்கள்,பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், அதிமுக கட்சியை துரோகிகளிடம் இருந்து மீட்க வேண்டும், ஆட்சி அதிகாரம் இருந்ததால் ஏமாற்றி வந்தார்கள். இன்றைக்கு அது இல்லை.

வரும் மக்களவைத் தேர்தல் துரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக அமையும். தமிழ்நாட்டு மக்களோடு சேர்ந்து அந்த துரோகிகளுக்கு சாவு மணி அடிக்க வேண்டும். தேர்தல் பணியை இப்போதே தொடங்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என பேசினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே ஓபிஎஸ்-நானும் இணைந்து பணியாற்றுவோம் என முடிவெடுத்துள்ளோம்.

மக்களவைத் தேர்தலுக்காக, அமமுக ஒரு சில கட்சிகளுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறோம். அவையெல்லாம் நல்லவிதமாக முடிந்த பிறகு கூட்டணிக் குறித்து சொல்வது தான் அரசியல் கட்சிக்கு அழகு. கூட்டணி முடிவான பிறகு, முறையாக உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

நேரத்தை வீணாக்க விரும்பவில்லை
எடப்பாடி பழனிசாமி பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. ஜெயலலிதாவின் இயக்கத்தை கையகப்படுத்தி வைத்துள்ள அந்த சுயநலவாதிகளின் தோல் உரிக்கப்படுகின்ற  காலம் வெகு விரைவில் வரும். என்றைக்கும் துரோகத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டு மக்கள் இருக்க மாட்டார்கள். துரோகம் செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிக்கும் காலம் வரும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

விஜயகாந்க் மரணம் உண்மையிலேயே வருத்தப்படக்கூடியது.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதனை ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் கையில் தான் உள்ளது. அதைப்பற்றி நான் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதற்காகவும், தீயவர்களிடமிருந்து அதிமுக இயக்கத்தை  மீட்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அமமுக. இந்தக் கொள்கையில், லட்சியத்தில் இருந்து என்றைக்கும் நாங்கள் பின் வாங்க மாட்டோம்.

எடப்பாடி பழனிசாமி ஆளும் கட்சியாக இருந்த போதே, ஆளும் கட்சி பலனை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு என்னோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். 

எடப்பாடியுடன் இணைந்தது தவறு என உணர்ந்துதான் ஓபிஎஸ் அவரிடம் இருந்து வெளியேறி ஜெயலலிதாவின் தொண்டர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எங்களோடு இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார். அதைப் பற்றி திரும்பத் திரும்ப பேச வேண்டிய அவசியம் இல்லை.

மக்களவைத் தேர்தலில் சசிகலா பிரசாரத்திற்கு வர வாய்ப்புள்ளதா? என்று கேள்விக்கு இதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என பதிலளித்தார்.

ஊழல் புகார் பட்டியல்:
பாஜக வெளியிடுவதாக சொன்ன ஊழல் புகார் பட்டியலுக்காக நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆளும் திமுக மக்கள் விரோத ஆட்சியை செய்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் ஊழல் ஆட்சி மீது கோபப்பட்ட மக்கள், விடியல் வரும் என நினைத்து திமுகவுக்கு வாக்களித்து திமுகவிடம் ஆட்சியை கொடுத்தார்கள். ஆனால் இன்றைக்கு திமுக விடியாத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.தேர்தல் வாக்குறுதிகளை கூட அவர்கள் நிறைவேற்ற மனம் இல்லாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு எல்லாம் மாற்று சக்தியாக அமமுகவை  வரும் காலங்களில் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என டி.டி.வி. தினகரன் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com