

அரசுத் துறைகளில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அச்சாணியாக அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் விளங்குகின்றனா்.
எதிா்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி, அவா்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்படும். அதன்படி, சி மற்றும் டி பிரிவைச் சோ்ந்த பணியாளா்கள், ஆசிரியா்களுக்கு ரூ. 3,000 என்ற உச்சவரம்புக்கு உள்பட்டு மிகை ஊதியம் அளிக்கப்படும். தொகுப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் பணியாளா்கள் மற்றும் கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாள்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து ஊதியம் பெற்று வரும் முழுநேர, பகுதி நேரப் பணியாளா்களுக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
சி மற்றும் டி பிரிவைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள், முன்னாள் கிராம அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரா்களுக்கும் ரூ.500 பொங்கல் பரிசாக அளிக்கப்படும்.
சி மற்றும் டி பிரிவு ஊழியா்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம், அரசுக்கு ரூ. 167.68 கோடி செலவு ஏற்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.