தமிழகத்தில் இளம் மருத்துவர்கள் தற்கொலையின் அதிர்ச்சி தரும் பின்னணி

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் படிக்கும் இளம் மருத்துவர்களுக்கு பணிச்சுமையை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் இளம் மருத்துவர்கள் தற்கொலையின் அதிர்ச்சி தரும் பின்னணி


அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் படிக்கும் இளம் மருத்துவர்களுக்கு மிக நீண்ட பணி நேரம், சில நேரங்களில் இது 36 மணி நேரத்துக்கும் மேல் நீடிக்கிறது, வார விடுமுறை நாள்கள் ரத்து  போன்றவை கடும் பணிச்சுமையை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், முதுநிலை மருத்துவம் பயிலும் இளம் மருத்துவர்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்படுவதாகவும் அண்மையில், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இளம் மருத்துவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவப் பணியாளர்கள் கழகம் இந்த ஆய்வை நடத்தியது. 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் 100 முதுநிலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றனர். சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றும் மருத்துவர்களும் இதில் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற பெரும்பாலான மருத்துவர்கள், தங்களுக்கு பணிச்சுமை இருப்பதை உறுதி செய்துள்ளனர். பொது மருத்துவம், எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், முதியோர் மருத்துவம், மயக்கவியல் மருத்துவம், பொது அறுவைசிகிச்சை, அவசரகால சிகிச்சை, குழந்தைகள் நலப்பிரிவு, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவப் பிரிவுகளில் கடுமையான பணிச்சுமை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூறுகையில், வாரத்தில் வார விடுமுறையின்றி இரண்டு நாள்கள் 24 மணி நேரம் பணியாற்ற வைக்கப்படுகிறோம். மருத்துவப் பணி மட்டுமல்லாமல், நிர்வாகப் பணிகளையும் உதாரணமாக விழா அரங்குகளை சீரமைப்பது, ஆடியோ வசதி மற்றும் இதர விஷயங்கள் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யவும் நிர்பந்திக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மதுரை மருத்துவக் கல்லூரியில் நிலைமை இன்னமும் மோசம். முதுநிலை மருத்துவ மாணவர்கள், 24 மணி நேரம் பணியமர்த்த வைக்கப்பட்டு, சில நேரங்களில் அது 36 மணி நேரமாகக் கூட நீட்டிக்கப்படுகிறதாம். பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 12 மணி நேர பணி நேரம் என்பது மாதக் கணக்கில் 18 மணி நேரமாக நீட்டிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சேலத்தில உள்ள மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கூறுகையில், மயக்கவியல் துறை மருத்துவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் உடலுறுப்பு அறுவை சிகிச்சையின்போது தொடர்ந்து 36 மணி நேரம் பணியாற்ற வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல், இரவுப் பணியின்போது, தாங்கள் தங்குவதற்கு போதிய அறைவசதியும் கிடையாது, இதில், பணி தொடர்பான பயிற்சிகளோ, பாடங்களோ கிடைப்பதில்லை. இதனால், எங்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் கடுமையான உளைச்சல் ஏற்படுகிறது என்று இந்த மருத்துவமனை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டான்லி மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவர்களுக்கு விடுதி வசதியும் ஏற்படுத்தித் தரப்படுவதில்லையாம். தொடர்ந்து 24 மணி நேரத்துக்கும் மேல் பணிசெய்துவிட்டு உறங்காத நிலையில், அவர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். 

இதைவிட திருவாரூர் மருத்துவக் கல்லூரியின் முதுநிலை மருத்துவ மாணவர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது, அங்கு, வாரத்துக்கு 100 மணி நேரத்துக்கும் மேல் பணியாற்ற வைக்கப்படுவதாகவும், காப்பீடு தொடர்பான போலியான அறிக்கைகளைத் தயார் செய்யவும் எங்களை பணிக்கிறார்கள் என்று ஒரு தகவலையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இதேதொடர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவர்களின் நிலையும். இங்கும் வார விடுமுறைகள் அளிக்கப்படுவதில்லை என்கிறார்கள். இத்தனைக்கும் மேல், சென்னை மருத்துவக் கல்லூரி, கடலூர் மருத்துவக் கல்லூரி உள்பல பல கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உரிய காலத்தில் உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் அதிகமாக முன்வைக்கப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் கழகத்தின் ஒருங்கிணைப்புச் செயலர் டாக்டர் இ. யோகேஸ்வரன் கூறுகையில், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு வார இறுதி விடுமுறையை உறுதி செய்யவே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சில மருத்துவர்கள் பல மணி நேரம் வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள். மூத்த மருத்துவர்கள் தங்கள் வேலை நேரத்தை இவர்களை விட்டு செய்ய வைக்கிறார்கள். சிலர், காலை 7 மணிக்கு பணிக்கு வந்தால், மறுநாள் அதிகாலை 1 மணி வரை பணியாற்றுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஜே. சண்முகமணியிடம் அறிக்கை அளிக்கப்பட்டிருப்பதாகவும் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com