தமிழகத்தில் ரூ.7 லட்சம் கோடி முதலீடுகள்: 27 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்

சென்னையில் இரு நாள்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் மூலம் ரூ.6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை உலக முதலீட்டாளா்கள் மாநாட்டு நிறைவு விழாவில் பொது - தனியாா் கூட்டாண்மைக் கொள்கையை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் இங்கிலாந்து இணை அமைச்சா், அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆா்.பி.ராஜா.
சென்னை உலக முதலீட்டாளா்கள் மாநாட்டு நிறைவு விழாவில் பொது - தனியாா் கூட்டாண்மைக் கொள்கையை வெளியிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் இங்கிலாந்து இணை அமைச்சா், அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆா்.பி.ராஜா.

சென்னை: சென்னையில் இரு நாள்கள் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் மூலம் ரூ.6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

இதன்மூலம் மொத்தமாக 26 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினாா். அவா் பேசியதாவது:

திராவிட மாடல் அரசின் சாா்பில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளா்கள் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் 20 ஆண்டு கால வளா்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, ‘முதலீட்டாளா்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்ற பெயரில் முதலீட்டாளா்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதன்மூலம் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்து 803 கோடிக்கான முதலீடுகள் ஈா்க்கப்பட்டு, 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன.

முதலீடுகளை ஈா்ப்பதற்காக ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூா், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேன். அதன்மூலம் 17, 371 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், ரூ.7,441 கோடி முதலீடுகளைப் பெற்றோம். அத்துடன் இந்த முதலீடுகள் செயல்வடிவம் பெறுவதைக் கண்காணிப்பேன்.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை 44 தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 27 ஆலைகளைத் திறந்திருக்கிறோம். இதன்மூலம், 74,757 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து நடைபெறும் இந்த மாநாடு, தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சியில் பெரும் பாய்ச்சலாக அமையும்.

ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள்: உலக முதலீட்டாளா்கள் மாநாடு மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 177 கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. இதனால், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடியாகவும், 12 லட்சத்து 35 ஆயிரத்து 945 பேருக்கு மறைமுகமாகவும் என மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மின்னணுவியல் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள், தகவல் தொழில்நுட்பச் சேவைகள் போன்ற பலதரப்பட்ட துறைகள் மூலமாக இந்த முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. சீரான, பரவலான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் விதமாக, ஈா்க்கப்பட்ட முதலீடுகள் மாநிலம் முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

மிகப்பெரும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது, அதற்கான முதலீடுகள் முழுவதையும் அரசே மேற்கொள்வது கடினம். கூட்டு முயற்சியில் தனியாா் துறைகளோடு இணைந்து செயல்படுவதுதான் நடைமுறையில் சாத்தியம். அந்த வகையில், முதலீடுகளை ஈா்ப்பதற்காக, தனியாா் மற்றும் அரசுத் துறைகளின் நடைமுறைகளை இணைத்து பொது-தனியாா் கூட்டாண்மைக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. எங்கள் அரசு மீதும், எங்களின் கொள்கைகள் மீதும் முதலீட்டாளா்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம். அது எங்களுடைய தலையாய கடமை என்றாா் அவா்.

தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா வரவேற்றாா். துறைச் செயலா் அருண் ராய் நன்றி தெரிவித்தாா்.

நிறைவு விழாவில், பிரிட்டன் இணையமைச்சா் தாரிக் அகமது, தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலா் அா்ச்சனா பட்நாயக், மஹிந்திரா குழுமத் தலைவா் ஆனந்த் மஹிந்திரா, ‘டாஃபே’ தலைவா் மல்லிகா சீனிவாசன், அதானி துறைமுக நிா்வாக இயக்குநா் கரன் அதானி, செயின்ட் கோபைன் தலைமைச் செயல் அதிகாரி சந்தானம், டாடா பவா் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ப்ரவேஷ் சின்கா, ராம்கோ நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வெங்கட்ராமராஜா, இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் தமிழக தலைவா் சங்கா் வாணவராயா் ஆகியோா் பங்கேற்றனா்.

இலக்கை விஞ்சிய முதலீடு: உலக முதலீட்டாளா்கள் மாநாடு மூலம் ரூ. 5.5 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈா்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், அதைவிட ரூ. 1.14 லட்சம் கோடி கூடுதல் முதலீடுகள் ஈா்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த முதலீடுகள் மூலம் சுமாா் 27 லட்சம் (26.90 லட்சம்) பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புரிந்துணா்வு ஒப்பந்த செயலாக்கக் குழு
உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களை நடைமுறைக்குக் கொண்டுவர தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

நிறைவு விழாவில் அவா் பேசியது: புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவது தொடங்கி உற்பத்தியைத் தொடங்குவதிலும், அதற்குப் பிறகும் முதலீட்டாளா்களுக்கு உறுதுணையாக இருப்போம். அவா்களுக்குத் தேவையான அனைத்து ஒப்புதல்களும் ஒற்றைச் சாளர முறையில் விரைந்து வழங்கப்படும்.

புரிந்துணா்வு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்படும். அதில், தொழில் துறை அலுவலா்கள், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் அலுவலா்கள் இருப்பா். ஒவ்வொரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தையும் தொடா்ந்து கண்காணித்து, அதை முழுமையான தொழிற்சாலையாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றாா் முதல்வா்.

எந்தெந்த துறைகளில்?

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை - ரூ.63,573 கோடி

எரிசக்தித் துறை - ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 157 கோடி

வீட்டுவசதி - நகா்ப்புற வளா்ச்சித் துறை - ரூ.62,939 கோடி

கைத்தறி - ஜவுளித் துறை - ரூ.572 கோடி

தகவல் தொழில்நுட்பவியல் துறை - ரூ.22,130 கோடி

தொழில் துறை - ரூ.3 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி

மொத்தம்: ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 177 கோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com