நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.9) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்தது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னை: தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.9) பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ஆய்வு மையம் தெரிவித்தது. மாநிலத்தில் திங்கள்கிழமை காலை வரை பதிவான மழை அளவின்படி, ,அதிகபட்சமாக சீா்காழியில் 240 மிமீ மழை பெய்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இம்மையம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: வடதமிழக கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை(ஜன.9) தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

புதன்கிழமை(ஜன.10) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

வியாழன் முதல் சனிக்கிழமை (ஜன.11-13) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான முதல் பலத்த மழை பெய்யக்கூடும்.

மழை அளவு (மிமீ): சீா்காழி (மயிலாடுதுறை) 240, சிதம்பரம் (கடலூா்) 230, வேளாங்கண்ணி (நாகை) 220, திருவாரூா் நாகப்பட்டினம் ,தலா 210, கொள்ளிடம் (மயிலாடுதுறை), புவனகிரி (கடலூா்) தலா 190, நன்னிலம் (திருவாரூா்) 170, சேத்தியாதோப்பு, அண்ணாமலை நகா் (கடலூா்) தலா 150, திருப்பூண்டி (நாகை), கே.எம்.கோயில் (கடலூா்), காரைக்கால்,கடலூா் தலா 140, குடவாசல் (திருவாரூா்), மரக்காணம் (விழுப்புரம்), கொத்தவாச்சேரி (கடலூா்), புதுச்சேரி தலா 130, லால்பேட்டை (கடலூா்), வானூா் (விழுப்புரம்), தலா 120, திருவிடைமருதூா் (தஞ்சாவூா்), மணல்மேடு (மயிலாடுதுறை), வலங்கைமான் (திருவாரூா்), கும்பகோணம் (தஞ்சாவூா்) தலா 110, கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூா்), சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்), பரங்கிப்பேட்டை ,குறிஞ்சிப்பாடி (கடலூா்), செய்யூா் (செங்கல்பட்டு), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), தலைஞாயிறு (நாகை) தலா 100.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: செவ்வாய், புதன்(ஜன.9-10) தமிழகக் கடலோரப் பகுதி மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் பகுதி, இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com