பாஜகவின் ஜாதிக் கூட்டணி கணக்கு!

தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத மாற்று அணி உருவாகிறது என்பதைக் குறிப்பால் உணர்த்தியிருக்கிறது பிரதமர் மோடியின் சமீபத்திய திருச்சி வருகை.
ஜாதிக் கூட்டணியை ஏற்படுத்தி தமிழக அரசியலில் தடம் பதிக்க முயற்சிக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
ஜாதிக் கூட்டணியை ஏற்படுத்தி தமிழக அரசியலில் தடம் பதிக்க முயற்சிக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

தமிழகத்தில் திமுக, அதிமுக அல்லாத மாற்று அணி உருவாகிறது என்பதைக் குறிப்பால் உணர்த்தியிருக்கிறது பிரதமர் மோடியின் சமீபத்திய திருச்சி வருகை.
தமிழகத்தில் 2014, 2019 என இரு மக்களவைத் தேர்தல்களிலும் ராகுல் -மோடி என்பதை மையப்படுத்திதான் வாக்குகள் விழுந்துள்ளன. 2014-இல் மோடி எதிர்ப்பு வாக்குகள் மூன்று முனையாகச் சிதறியதால் அதிமுக இல்லாத தேசிய ஜனநாயக கூட்டணி கன்னியாகுமரி, தருமபுரி என இரு தொகுதிகளிலும், 2019-இல் மோடி எதிர்ப்பு வாக்குகள் ஒருமுகமாக குவிந்ததால் அதிமுக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
மோடி எதிர்ப்பை மையப்படுத்தி 2014-இல் 37 தொகுதிகளில் அதிமுகவும், 2019-இல் 38 தொகுதிகளில் திமுகவும் வென்றன. தமிழகத்தில் இந்த முறை மோடி எதிர்ப்பு அலை குறைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இந்த முறையும் 2014 மக்களவைத் தேர்தல் போல பலமுனைப் போட்டியை உருவாக்கி மோடி எதிர்ப்பு வாக்குகளைச் சிதறச் செய்து ஒரு சில தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்பது தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் கணக்கு. இதற்கு பச்சைக் கொடி காட்டுவதுபோல அமைந்திருக்கிறது பிரதமர் மோடியின் திருச்சி வருகை.
தேமுதிகவை ஈர்க்கும் பாஜக: திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு  புகழாரம் சூட்டினார். மேலும், விஜயகாந்த் பற்றிய மோடியின் கட்டுரை தமிழகத்தின் பிரபல ஆங்கில, தமிழ் நாளிதழ்களில் வெளியாயின. பாஜக கூட்டணிக்குள் தேமுதிகவை இணைப்பதன் மூலம் விஜயகாந்த் மீது எழுந்துள்ள அனுதாபத்தை வாக்குகளாக அறுவடை செய்யலாம் என்பது பாஜகவின் கணக்கு.
பலமுனைப் போட்டி உருவானால், கொங்கு மண்டலத்தில் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், வட தமிழகத்தில் தருமபுரி (பாமக ஒருவேளை இணைந்தால்), வேலூர், சென்னையில் தென்சென்னை, தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட 13 தொகுதிகளில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கும் எனக் கருதுகிறது  பாஜக.
இது குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டதற்கு, தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி குழுக்களை பாஜக பலப்படுத்தி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) எந்தெந்தக் கட்சிகள் இடம்பெறும் என்பதை பாஜக தேசியத் தலைமை முடிவு செய்யும் என்றார்.
பாஜகவின் கணக்கு: தென் தமிழகத்தில் ஓபிஎஸ்-டி.டி.வி.தினகரன் உதவியுடன் முக்குலத்தோர், தேமுதிக உதவியுடன் நாயுடு, நாயக்கர் உள்பட தெலுங்கு மொழி பேசுவோர், கே.கே.செல்வகுமார் உதவியுடன் முத்தரையர், ஜான் பாண்டியன் மூலம் தேவேந்திர குல வேளாளர், பாஜகவின் பாரம்பரிய ஹிந்து நாடார் மற்றும் பிராமணர்கள் உள்பட ஹிந்துத்துவ வாக்கு வங்கியைப் பயன்படுத்த முனைகிறது பாஜக.
இதன் சாத்தியம் குறித்து அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனிடம் கேட்டதற்கு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது மக்கள் அதிருப்தி அடைந்துதான் திமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால், தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக முழுமையாக அமல்படுத்தாததால் திமுக அரசு மீது மக்கள் கொதிப்படைந்துள்ளனர். திமுக, அதிமுக இல்லாத மாற்று சக்திகள் ஓரணியில் திரண்டால் அதற்கு அமமுக துணை நிற்கும் என்று கூறினார்.
கொங்கு மண்டலத்தில் அண்ணாமலையை முன்னிறுத்தி கொங்கு வேளாளர் கவுண்டர், தேமுதிக மூலம் தெலுங்கு மொழி பேசுவோர், பாமக மூலம் வன்னியர்கள் மற்றும் பாஜகவின் பிற ஹிந்துத்துவ வாக்கு வங்கியைப் பயன்படுத்தியும், வட தமிழகத்தில் வன்னியர்கள், தெலுங்கு மொழி பேசுவோர், பாரிவேந்தரைப் பயன்படுத்தி உடையார் மற்றும் ஹிந்துத்துவ வாக்கு வங்கியைப் பயன்படுத்தியும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வெற்றிக்கு திட்டமிடுகிறது பாஜக.
பாமகவின் நம்பிக்கை: இது குறித்து பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு கூறும்போது, பாமக தலைவராக அன்புமணி வந்த பிறகு எங்கள் கட்சி சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல் இது. அரசியல் சூழலை உன்னிப்பாக பாமக கவனித்து வருகிறது. 
விரைவில் கூடவுள்ள பாமக பொதுக் குழுவில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். பாமக இடம்பெறும் கூட்டணிதான் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். வெற்றிக் கூட்டணியை பாமக நிறுவனர் ச.ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முடிவு செய்வார்கள் என்றார்.
மொத்தத்தில் தனக்கு தொடர்ந்து இரு முறை தோல்வியைக் கொடுத்த தமிழகத்தில் மூன்றாவது முறை ஒரு சில தொகுதிகளாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் பிரதமர் மோடி. அதனால்தான், 2024-ஆம் ஆண்டில் முதல் நிகழ்ச்சியாக தமிழகத்துக்கு வந்திருக்கிறார். ஜனவரி 19-ஆம் தேதி மீண்டும் தமிழகம் வர பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
ஜாதிக் கூட்டணியை ஏற்படுத்தி தமிழக அரசியலில் தடம் பதிக்க முயற்சிக்கிறது பாரதிய ஜனதா கட்சி. மாற்று அணியால் தமிழக அரசியல் களத்தில் மாற்றம் ஏற்படுமா என்பது, எந்தெந்தக் கட்சிகள் பாஜகவின் பின்னால் அணி திரளப் போகின்றன, பிரசார வியூகம் உள்ளிட்டவற்றைப் பொருத்து அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com