ஆளுநர் நடவடிக்கை ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: இரா.முத்தரசன்

சேலம் பல்கலைக் கழகம் வளாகம் சென்றதும், அங்கு குற்றக் கறை படிந்த துணை வேந்தர் உட்பட பேராசிரியர்களை அழைத்து பேசியதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது
ஆளுநர் நடவடிக்கை ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: இரா.முத்தரசன்
Published on
Updated on
1 min read

ஆளுநர் “கலந்துரையாடல்” நிகழ்வுக்காக, சேலம் பல்கலைக் கழகம் வளாகம் சென்றதும், அங்கு குற்றக் கறை படிந்த துணை வேந்தர் உட்பட பேராசிரியர்களை அழைத்து பேசியதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் ஊழல் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளியே வந்துள்ளார்.

துணை வேந்தர் மற்றும் பேராசிரியர்கள் மீதான குற்றச்செயல்கள் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை (ஜன.11) காவல்துறையினர் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் அலுவலகங்கள் உள்பட 6 இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சூழலில் அரசியலமைப்பு அதிகாரப் பொறுப்பில் உள்ள ஆளுநர் “கலந்துரையாடல்” (?) நிகழ்வுக்காக பல்கலைக் கழகம் வளாகம் சென்றதும், அங்கு குற்றக் கறை படிந்த துணை வேந்தர் உட்பட பேராசிரியர்களை அழைத்து பேசியதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

விசாரணை நடந்து வரும் சூழலில் ஆளுநர் வருகை தருவது சரியல்ல என மாணவர், இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அலட்சியம் செய்து, அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தி விட்டு, ஆளுநர் மேற்கொண்ட நடவடிக்கையால் குற்றவாளிகள் தப்பித்து செல்ல, சாட்சியங்கள், ஆவணங்கள் இடம் மாற்றப்படுமோ என ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மக்கள் தேர்ந்தெடுத்து அமைத்துள்ள அரசுக்கு, ஆளுநர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் செய்த முறையீட்டில், ஆளுநர், முதல்வர் சந்தித்து பேசி சுமூக நிலைக்கு திருப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஆளுநர் அறிவித்த  பல்கலைக் கழக துணை வேந்தர் தேடுதல் குழுவை  ஆளுநர் ரத்து செய்து, இரண்டொரு நாளில் சேலம் பெரியார் பல்கலைக் கழக நிகழ்வு மீண்டும் எதிர்மறையான திசையில் செல்ல முயற்சிப்பதை வெளிப்படுத்துகிறது.

ஆளுநர் எனும் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு வரும் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிப்பதுடன், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர், இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசை முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com