பாலியல் தொல்லை: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு ஒத்திவைப்பு

பாலியல் தொல்லை வழக்கில், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை ஜனவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்
முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்

விழுப்புரம்: பாலியல் தொல்லை வழக்கில், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை ஜனவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 18 - ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

2021-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதும், புகாரளிக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக  அப்போது செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய கண்ணன் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிந்தனர்.

வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்தாண்டு ஜூன் 16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், ஓய்வுபெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை (ஏககாலம்) எஸ்.பி. கண்ணனுக்கு ஒரு பிரிவில் ரூ.500 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில்ஒய்வு பெற்ற சிறப்பு டிஜிபி, எஸ்.பி. சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், இந்த மேல்முறையீட்டு வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்ததால், டிசம்பர் 19-ஆம் தேதியும், அதைத் தொடர்ந்து ஜனவரி 6-ஆம் தேதியும்  விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நீதிமன்றத்தில் ஆஜரனார்.அப்போதும் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்ததால் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஜனவரி 12-ஆம் தேதி வழங்கப்படும் என முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா அறிவித்து, விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், பாலியல் தொல்லை வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை ஜனவரி 9--ஆம்தேதி விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஓய்வுபெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை  ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா, அன்றைய தினம் ஒய்வு பெற்ற சிறப்பு டிஜிபி தரப்பில் வாதிடுவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com