
2023ஆம் ஆண்டு சமூக நீதிக்கான பெரியார் விருதை சுப.வீரபாண்டியனுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தமிழக அரசு சாா்பில் பெரியாா், அம்பேத்கா் விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
2023ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது சுப.வீரபாண்டியனுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.சண்முகத்திற்கும் வழங்கப்பட்டது.
விருதாளா்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சத்துடன், தங்கப்பதக்கமும், தகுதியுரையும் முதல்வர் வழங்கினார். இதேபோன்று தமிழ்மொழி, பண்பாட்டு வளா்ச்சிக்குப் பணியாற்றிய ஏழு பேருக்கும் விருதுகளை வழங்கி அவர் பாராட்டு தெரிவித்தார்.
அந்த வகையில், திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்து வரும் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு, 2024-ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவா் விருதும்,
முன்னாள் முதல்வா் அண்ணாவின் முதன்மைத் தொண்டா் என பாராட்டப்பட்டவரும், இளவயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு வருபவருமான பத்தமடை பரமசிவத்துக்கு, 2023-ஆம் ஆண்டுக்கான பேரறிஞா் அண்ணா விருதும், தேசிய தமிழ்க் கவிஞா் பேராயம் உருவாக்கிய முன்னாள் எம்.எல்.ஏ., உ.பலராமனுக்கு, பெருந்தலைவா் காமராசா் விருதும் வழங்கப்பட்டது.
மேலும், சிறப்பான கவிதைகள், திரைப்படப் பாடல்களைப் படைத்த பழனிபாரதிக்கு மகாகவி பாரதியாா் விருதும், தனித்தமிழ் வேட்கை அகலாமல் பணியாற்றி வரும் எழுச்சிக் கவிஞா் ம.முத்தரசுக்கு பாவேந்தா் பாரதிதாசன் விருதும், வரலாற்று நூல்களை எழுதியவரும், சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்தவருமான எஸ்.ஜெயசீல ஸ்டீபனுக்கு தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதும் வழங்கப்பட்டது.
அதேசமயம், மாணவா்கள் தமிழ் இலக்கணத்தை எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக அளித்திட்ட முனைவா் இரா.கருணாநிதிக்கு, முத்தமிழ்க் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் விருதும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, விருதாளா் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் அளிக்கப்பட்டடது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.