சிதம்பரம் அருகே சாலை விபத்தில் கிராம உதவியாளர் பலி: மக்கள் சாலை மறியல்

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த மாற்றுத்திறனாளியான கிராம உதவியாளர் சக்திவேல் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்ததை அடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்க
விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தையாக்குப்பம் பகுதி கிராம மக்கள்.
விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தையாக்குப்பம் பகுதி கிராம மக்கள்.

சிதம்பரம்: சிதம்பரம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த மாற்றுத்திறனாளியான கிராம உதவியாளர் சக்திவேல் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்ததை அடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே உள்ள மணலூர் டி.என்.சி.எஸ்.சி சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சக்திவேல் (37).மாற்றுத்திறனாளியான இவர் பலத்தாங்கரையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. மனைவி கோமதி. குழந்தை இல்லை.

இந்த நிலையில், சிதம்பரம் அருகே நாகை-விழுப்புரம் இடையே நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வந்திருந்தது.கடந்த இரண்டு நாட்களுக்கு பணி முடிந்த பகுதிகளுக்கு மட்டும் இந்த சாலை பணி போக்குவரத்துக்கு துவங்கியது. சி முட்லூர்- மந்தகரை வரை சாலை தற்போது திறக்கப்பட்டுள்ளது. 

விபத்தில் இறந்த கிராம உதவியாளர் சக்திவேல்

இந்த நிலையில் லால்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் செல்லக்கூடிய இந்த புறவழிச் சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு கிராம உதவியாளர் சக்திவேல் பாலத்தங்கரைக்கு சென்று விட்டு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பினார். அப்போது புறவழிச் சாலையை கடக்கும் போது, சென்னையில் இருந்து சி.முட்லூர் வழியாக சீர்காழி சென்ற கார், எதிர்பாராமல்  சக்திவேல்  வாகனம் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளோடு தூக்கி வீசப்பட்டு விழுந்த சக்திவேலுக்கு தலை பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த பகுதியில் இருந்தோர் விரைந்து வந்து  மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைக்கு பெற்று வந்தார். 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை சக்திவேல் உயிரிழந்தார . 

இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் சாலை மறியல் 
இந்த நிலையில், சனிக்கிழமை காலை 10 மணியளவில் அந்த பகுதியில் உள்ள தையாக்குப்பம் பகுதி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு புறவழிச்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். அந்த பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது, விபத்துகளை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த சிதம்பரம் தாலுக்கா பொறுப்பு காவல் ஆய்வாளர் ஆறுமுகம், சிதம்பரம் வட்டாட்சியர்  செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து  அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com