
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாள்களில் இதுவரை இல்லாத அளவில் அதிகளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை முதல் 5 நாள்களுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனிடையே, சென்னையில் வசிக்கும் வெளியூா்வாசிகள் வெள்ளிக்கிழமை முதல் பேருந்து, ரயில் மூலம் சொந்த ஊா்களுக்குப் புறப்படத் தொடங்கினா். சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு வசதியாகவும், ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடுவதை தவிா்க்கும் வகையிலும் கோயம்பேடு, கிளாம்பாக்கம், கே.கே.நகா், மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனால் பொதுமக்கள் கோயம்பேடு செல்வதற்குப் பதிலாக தங்களது ஊருக்குச் செல்லும் பேருந்து எங்கிருந்து செல்லும் என அறிந்து நேரடியாக செல்வதால் பேருந்து நிலையத்தில் முன்பைவிட பொதுமக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இருந்தாலும், நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் பயணிகளால் முக்கியச் சாலைகளில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சென்னையில் இருந்து சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,260 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாள்களில் இதுவரை இல்லாத அளவில் அதிகளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாள்களில் இதுவரை இல்லாத அளவில் அதிகளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த 2 நாள்களில் மட்டும் 4.34 லட்சம் பயணிகள் அரசுப் பேருந்துகளில் பயணித்தள்ளனர். பேருந்து நிலையங்களில் கடந்த 2 நாள்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு மக்கள் பாதுக்காபான பயணம் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.
மொத்தமாக 1.44 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். கடந்த ஆண்டை விட கூடுதலாக 23 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். இதன் காரணமாகவே நேற்று தங்கள் ஊர்களுக்கு செல்லவிருந்த பயணிகளுக்கு சற்று காலதாமதம் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.