சிதம்பரம்: வியதீபாதம் நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரம் தேரோடும் நான்கு வீதியில் வலம் வந்து நடராஜ பெருமானை தரிசித்து வழிபட்டனர்.
மார்கழி மாதம் அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக அமைகின்றது. ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில், மார்கழியில், அதிகாலைப் பொழுதாகிய பிரம்ம முஹூர்த்த நேரத்தில், மிகச் சிறப்பாக திருப்பள்ளியெழுச்சி காலம் நடைபெறும். இந்த மார்கழி மாதத்தில் (பஞ்சாங்கத்தில் ஒரு அங்கமாகிய) வியதீபாதம் என்னும் யோகம் வரும் நாளில் ஸ்ரீ சித்ஸபேசரை தரிசனம் செய்வது ஸர்வ பாபங்களையும் நீக்கி, பெரும் புண்யங்களையும், அனைத்து செல்வங்களையும் தரவல்லது.
மார்கழி மாதத்தின் அனைத்து நாள்களில் நடைபெறும் திருப்பள்ளியெழுச்சி கால தரிசனங்களின் பலன்கள் அனைத்தும், (தனுர்) வியதீபாத தினத்தில் தரிசனம் செய்தால் கிடைக்கும் என்பது ஐதீகம்.
எனவே வியதீபாதம் நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சிதம்பரம் தேரோடு வீதியில் வலம் வந்தும், கோயில் உள்பிரகாரத்திலும் வலம் வந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானை தரிசித்தனர். நான்கு வீதிகளிலும் மக்களுக்கு பால் மற்றும் அன்னதானம் பக்தர்களால் வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: சென்னையில் கடும்புகை மூட்டம்: விமான சேவை பாதிப்பு
சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன.