காவி உடையில் திருவள்ளுவர்: ஆளுநர் ஆர்.என். ரவி பதிவால் சர்ச்சை; முதல்வர் கருத்து

காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்து கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.
காவி உடையில் திருவள்ளுவர்: ஆளுநர் ஆர்.என். ரவி பதிவால் சர்ச்சை; முதல்வர் கருத்து

காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்து திருவள்ளுவர் தின வாழ்த்து கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி லக்ஷ்மி ரவி, திருவள்ளுவர் தினத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவப் படத்துக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது

இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்  என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டுள்ளார்.

அவர் பகிர்ந்த பதிவிலும், மரியாதை செலுத்திய உருவப்படத்திலும் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

133 அடியில் சிலையும், தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவிய தமிழ்நாடு. தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்தவர் திருவள்ளுவர். உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள். குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி! என்று காவி உடையில் திருவள்ளுவர் படத்தை ஆளுநர் பகிர்ந்திருந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், திருக்குறள் மற்றும் திருவள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை. திருவள்ளுவரை ஒரு துறவி என யாருமே கூறியது கிடையாது. திருக்குறளில் எந்த ஒரு மத அடையாளமும் கிடையாது. மனிதநேயத்துக்கு ஒரு நிறம் இருந்தால் அதுதான் திருவள்ளுவரின் நிறம். எனக்குத் தெரிந்து அடுத்த மனிதநேயத்தின் அடையாளம் பெரியார். வேண்டுமென்றால் வள்ளுவருக்கு கருப்பு நிறம் போடலாம் என்று தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com