பொன்னாரம்பட்டியில் பேய் விரட்டும் வினோத திருவிழா!

சேலம் மாவட்டம் வாழப்பாடி‌ அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில், காணும் பொங்கலையொட்டி,  பெண்களுக்கு பேய் விரட்டும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
பொன்னாரம்பட்டியில் நடைபெற்ற பேய் விரட்டும் திருவிழா (கோப்பு படம்)
பொன்னாரம்பட்டியில் நடைபெற்ற பேய் விரட்டும் திருவிழா (கோப்பு படம்)

சேலம் மாவட்டம் வாழப்பாடி‌ அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில், காணும் பொங்கலையொட்டி,  பெண்களுக்கு பேய் விரட்டும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த வினோத விழாவில் ஏராளமான பெண்கள் பூசாரிகளிடம் முறத்தடி வாங்கி பேய் விரட்டிக் கொண்டனர். 

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் பொங்கல் பண்டிகை தருணத்தில் எருதாட்டம், மஞ்சுவிரட்டு, பானை உடைத்தல், வழுக்கு மரமேறுதல், கபடிப்போட்டி உள்ளிட்ட பாரம்பரியத்தை பறைச்சாற்றும் விளையாட்டுகள் மட்டுமின்றி, கால்நடைகள் ஊர்வலம், வங்காநரி ஜல்லிக்கட்டு ஆகிய வினோத நிகழ்வுகளும் நடந்து வருகிறது. 

வித்தியாசமான திருவிழாக்களுக்கு பெயர் பெற்ற வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி கிராமத்தில், இந்த நவீன காலத்திலும்  காணும் பொங்கல் தோறும் பெண்களுக்கு பேய் விரட்டும் வினோத விழா நடந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். புதன்கிழமை காணும் பொங்கலன்று, கருப்பு நிற ஆடையை அணிந்து காட்டேரி வேடமிட்ட பூசாரிகள், மேள வாத்தியம் முழங்க ஆக்ரோஷத்துடன் ஆற்றங்கரைக்கு சென்றனர். அங்கு கூடியிருக்கும் பெண்களில் குறிப்பிட்ட சிலரின் தலைமுடியை பிடித்து, மூங்கில் தப்பை முறத்தால் தலையில் பூசாரிகள் 3 முறை அடித்த பிறகு நெற்றியில் விபூதி வைத்து அனுப்பி வைத்தனர். 

விரதமிருந்து காட்டேரி வேடமிட்ட‌ பூசாரிகளிடம் மூங்கில் முறத்தடி வாங்கினால், பெண்களை பிடித்திருக்கும் கெட்ட ஆவி வெளியேறி, திருமணம் விரைவாக கைகூடி நல்ல வரனும், குழந்தை பாக்கியம் கிடைக்குமென நம்பிக்கை தொடர்ந்து வருகிறது. இதனால், காணும் பொங்கல் தினமான புதன்கிழமை ஏறாளமான பெண்கள் முறத்தடி வாங்கி பேய் விரட்டிக் கொண்டனர். இந்த பேய் விரட்டும் விழாவைக் காணவும், பேய் விரட்டிக் கொள்ளவும் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூடியிருந்தனர். 

இந்த பேய் விரட்டும் திருவிழா குறித்து, கடந்தாண்டு பத்திரிக்கை, தொலைக்காட்சிகளிலும்,சமூக ஊடகங்களிலும் தகவல் வெளியானதால், இதனை தடுக்க இந்த ஆண்டு இந்தவிழாவில் பங்கேற்றவர் புகைப்படங்கள், வீடியோ எடுக்கவும், பதிவிடவும், விழாக்குழுவின் தடை விதித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com