அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தார் உதயநிதி ஸ்டாலின்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கிவைத்தார் உதயநிதி ஸ்டாலின்


மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை உறுதி மொழியுடன் துவங்கிய நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டிகளை துவங்கி வைத்தார்.

தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம் பாலமேடு ஜல்லிக்கட்டுகள் முறையை ஜனவரி 15, 16 ஆம் தேதிகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணி அளவில் உறுதிமொழி உடன் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க வீரர்கள் தொடர்ந்து உறுதி எடுத்துக் கொண்டனர். தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து துவங்கி வைத்தார். வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

1200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளனர். போட்டி மாலை வரை 10 சுற்றுகளாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களமிறங்குவர். அதில் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர் அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார். போட்டிகளில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம், சைக்கிள், பீரோ, கட்டில் மெத்தை, பித்தளை பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

அதிக காளைகளை பிடிக்கும் மாடு பிடி வீரர்களுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும், ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது. களத்தில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும் அதே போன்று பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது. 

காயம் படும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்காக மருத்துவத் துறை மற்றும் கால்நடை துறை சார்பாக சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. காயம்படும் வீரர்களை மற்றும் காளைகளை மீட்க இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தன்னார்வலர்கள் இதற்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அலங்காநல்லூர் முழுவதும் 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com