அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் இணைந்தார் காயத்ரி ரகுராம்

பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

தமிழக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி பாஜகவில் இருந்து 6 மாதத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். 

இதையடுத்து பாஜகவில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். விலகுவதாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல் பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வந்தார். இடையில் விசிக தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்த காயத்ரி ரகுராம், காங்கிரஸ் கட்சியின் 138வது ஆண்டு நிறைவையொட்டி அக்கட்சிக்கு நன்கொடையும் அளித்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வருடமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த காயத்ரி ரகுராம், அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் அவர் தன்னை இணைத்துக்கொண்டார்.

இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் தளத்தில், மக்களின் எண்ணங்களுக்கு உயிரூட்டி, அவற்றை நிறைவேற்ற களத்தில் தொடர்ந்து போராடும் இயக்கமாக இருக்கிறது அதிமுக. இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் நலனுக்கு முன்னுரிமை, பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றங்களுக்கு துணை நிற்பது போன்ற சமூக ஏற்றங்களுக்கு காரணமாக உள்ளது அதிமுக. 50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து, மக்களின் இதயங்களில் இடம்பெற்றிருக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்வதோடு, எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் உரிய பாடத்தை புகட்டி வரும் புரட்சித் தமிழர், எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் கீழ் கழகம் வெற்றிநடை போட உழைப்போம். 

முழு மனதுடன் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்றென்றும் நான் உங்கள் அனைவரையும் நேசிப்பேன். அனைவரின் ஆலோசனைகளையும் கேட்பதை உறுதி செய்வேன், கடந்த காலத்திலிருந்து எந்த தவறையும் செய்ய மாட்டேன். அன்பே  சமத்துவ, அன்பே ஒற்றுமை, அன்பே சமூக நீதி, அன்பே சிவம். 

கடினமான காலங்களில் என்னை ஆதரித்தவர்களை என்னால் மறக்க முடியாது. அவர்களுக்கு என்றென்றும் அன்புடன் கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com