வேங்கைவயல்
வேங்கைவயல்

வேங்கைவயல் உண்மை அறியும் சோதனை ஜன. 29-க்கு ஒத்திவைப்பு!

வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபி சிஐடி போலீஸாரின் மனு மீதான விசாரணை வரும் ஜன.29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Published on


வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை அறியும் சோதனை நடத்தக் கோரும் சிபி சிஐடி போலீஸாரின் மனு மீதான விசாரணை வரும் ஜன.29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கடந்த 2022 டிசம்பர் 26ஆம் தேதி தெரியவந்தது.

இந்த வழக்கை தற்போது விசாரித்து வரும் சிபி சிஐடி போலீஸார், சந்தேகத்துக்குரிய 10 பேரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த முடிவு செய்து, அதுகுறித்த மனுவை மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 9 பேர் ஆஜராகியிருந்தனர். ஒருவர் மட்டும் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து வரும் ஜன. 29ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை நீதிபதி எஸ். ஜெயந்தி ஒத்திவைத்தார்.

வேங்கைவயல் சம்பவத்தைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, இறையூர் அய்யனார் கோவிலில் பட்டியலின மக்களை உள்ளே விட மறுப்பு தெரிவிப்பது மற்றும் தேநீர்க் கடையில் இரட்டை டம்ளர் முறை கடைப்பிடிப்பது ஆகிய குற்றச்சாட்டுகளில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த இரு தனி வழக்குகளை விசாரித்து வரும் டிஎஸ்பி ராகவி, முறைப்படி சாட்சியங்களை முன்வைத்து புலன் விசாரணை நடத்தவில்லை எனக் குறிப்பிட்டு வேங்கைவயல் பட்டியலின மக்கள் சார்பில் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவர்கள் தரப்பில் வழக்குரைஞர் மலர்மன்னன் ஆஜராகினார். வழக்கு விசாரணையை வரும் பிப். 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ். ஜெயந்தி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com