கவனச்சிதறலை உருவாக்குவதே காங்கிரஸின் கொள்கை: அமித் ஷா

ராகுல் காந்தி அஸ்ஸாமில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், முக்கிய பிரச்னைகளில் இருந்து  கவனச்சிதறலை உருவாக்குவதே (திசைதிருப்புவதே) காங்கிரஸின் கொள்கை என்று  அமித் ஷா கூறினார்.
கவனச்சிதறலை உருவாக்குவதே காங்கிரஸின் கொள்கை: அமித் ஷா

சோனித்பூர் (அஸ்ஸாம்): ராகுல் காந்தி அஸ்ஸாமில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், முக்கிய பிரச்னைகளில் இருந்து கவனச்சிதறலை உருவாக்குவதே (திசைதிருப்புவதே) காங்கிரஸின் கொள்கை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். 

தேஜ்பூரில் நடந்த அனைத்து பாத்தோ மகாசபாவின் 13-ஆவது முப்பெரும் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்று பேசினார்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது என்றும், கடந்த மூன்று ஆண்டுகளில் போடோலாந்தில் ஒரு வன்முறைச் சம்பவம் கூட பதிவு செய்யப்படவில்லை என்று கூறுவது எனக்கு மிகுந்த பெருமை அளிக்கிறது. அங்கு தற்போது அமைதியும் நல்லிணக்கமும் நிலவி வருவதுடன், வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்று ஷா கூறினார்.

வடகிழக்கு மாநிலங்களில் நிலவி வரும் அமைதிக்காக பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டிய அமித் ஷா, "நாங்கள் புதிய வளர்ச்சிப் பாதையைத் தொடங்கியுள்ளோம். வளர்ச்சியை முன்னோக்கி கொண்டு செல்லவும், வடகிழக்கில் அமைதியை நிலைநாட்டவும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை இன்று வெற்றியடைந்துள்ளது" என்றார்.

“வடகிழக்கில் வன்முறை சம்பவங்கள் 73 சதவிதம் குறைந்துள்ளது, பாதுகாப்புப் படையினரின் இறப்பு 71 சதவிதம் குறைந்துள்ளது மற்றும் குடிமக்களின் இறப்புகள் 86 சதவிகிதம் குறைந்துள்ளது என வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் குறைந்து வருவது குறித்த புள்ளிவிவரங்களை குறிப்பிட்டு பேசிய அமித் ஷா, கடந்த ஒன்பது ஆண்டுகளில், ஒன்பது அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும், சுமார் 9000 இளைஞர்கள் வன்முறைப் பாதையை விட்டு வெளியேறி பிரதான நீரோட்டத்தில் இணைந்துள்ளதாகவும் இதற்காக பிரமோத் போரோவுக்கு (போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் தலைமை நிர்வாக உறுப்பினர்) நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்," என்று அமித் ஷா கூறினார்.

போடோலாந்து மக்கள் தங்களின் மதப் பழக்கவழக்கங்கள், பாரம்பரிய மரபுகளைப் பின்பற்றி, கலாசார நடைமுறைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு அமித் ஷா வலியுறுத்தினார்.

மேலும் "இயற்கையை விட பெரியது எதுவுமில்லை. இயற்கையை வழிபடும் மதங்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக எந்த விலையையும் கொடுக்க நரேந்திர மோடி அரசு தயாராக உள்ளது, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்," என்று அமித் ஷா உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com