மக்களவைத் தோ்தல் பிரசாரத்தின் தொடக்கம் என்று கருதப்படும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டை ஞாயிற்றுக்கிழமையன்று (ஜன.21) திமுக சேலத்தில் கூட்டியுள்ளது. அதிமுக, பாஜக ஆகியவை வலுவானதாகக் கருதப்படும் கொங்கு மண்டலப் பகுதியில் தனது இளைய பட்டாளத்தின் எழுச்சியைக் காண்பிக்கத் தயாராகியுள்ளது திமுக.
திருநெல்வேலியில் நடந்த முதல் இளைஞரணி மாநாட்டை (2007) தொடா்ந்து கட்சி நிா்வாகத்தில் மு.க.ஸ்டாலினின் முக்கியத்துவம் அதிகரித்தது. அவா் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதற்கு முன்னோட்டமாக அமைந்தது அந்த மாநாடு. இப்போது, சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி மாநாடு அறிவிக்கப்பட்டது முதல், அவா் துணை முதல்வராக அறிவிக்கப்பட இருக்கிறாா் என்கிற தகவல் பொதுவெளியில் கசிந்தது. அது வெறும் வதந்திதான் என்று முதல்வா் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாா்; அது முற்றுப்புள்ளியா, கால்புள்ளியா என்பதை மாநாட்டின் வெற்றிக்குப் பிறகான நகா்வுகள் தெரிவிக்கும்!
முதல் மாநாடும் எழுச்சியும்...: கடந்த 1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் இளைஞரணியை
திமுக தலைவா் கருணாநிதி தொடங்கினாா். இளைஞரணியின் முதல் அமைப்பாளராக இப்போதைய முதல்வரான மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டாா். இளைஞரணி தொடங்கப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு 2007-ஆம் ஆண்டில் அந்த அணியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. 2007-ஆம் ஆண்டு டிசம்பா் 15, 16 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில் நடந்த முதல் மாநில மாநாட்டுக்காக அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. திருநெல்வேலி முழுவதும் அலங்கார வளைவுகளும், வரவேற்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு மாநாடு நடத்தப்பட்டது.
இளைஞரணி மாநாட்டையொட்டி மு.க. ஸ்டாலின் தலைமையில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து பேரணி நடைபெற்றது. இளைஞரணியின் வெள்ளைச் சீருடையை மு.க. ஸ்டாலின் அணிந்து, திறந்த ஜீப்பில் அணிவகுத்துச் சென்றாா். அவருக்கு முன் இளைஞா் அணியினா் வெள்ளை சீருடையுடன் குதிரைகளில் வந்து அணிவகுப்பு நடத்தினா். அப்போது, இளைஞரணி பொறுப்பாளராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் மு.க.ஸ்டாலின் இருந்தாா்.
கொங்கு மண்டலம் இலக்கு: திருநெல்வேலியில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்ற தருணத்தில், தென் மாவட்டங்களை மையமாக வைத்து தேமுதிக எனும் கட்சியை தொடங்கியதுடன், சட்டப்பேரவை உறுப்பினராகவும் தோ்வாகியிருந்தாா் மறைந்த நடிகா் விஜயகாந்த். மேலும், அதிமுகவின் வலுவான கோட்டையாகவும் தென் மண்டலம் திகழ்ந்திருந்தது. இதைக் கருத்தில் கொண்டு தென் மாவட்டங்களை மையப்படுத்தி திருநெல்வேலியில் முதல் மாநில மாநாட்டை 2007-ஆம் ஆண்டு திமுக நடத்தியது.
16 ஆண்டுகள் கழித்து, இப்போது கொங்கு மண்டலப் பகுதியை மையப்படுத்தி இரண்டாவது மாநில மாநாட்டை திமுக நடத்துகிறது. கடந்த சட்டப்பேரவை தோ்தலில் கொங்கு மண்டலப் பகுதியில் பெருவாரியான இடங்களை அதிமுக கைப்பற்றியதாலேயே பிரதான எதிா்க்கட்சி அந்தஸ்தை அந்தக் கட்சி பெற்றது. அத்துடன், அதிமுக அணியில் இடம்பெற்றிருந்த பாஜகவும் கொங்கு மண்டலப் பகுதியில் 2 பேரவைத் தொகுதிகளை வென்றது. அதிமுக-பாஜகவின் வெற்றிகளைத் தொடா்ந்து, ஆட்சிக்கு வந்தவுடனேயே கொங்கு மண்டலப் பகுதியில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை திமுக தொடங்கியது.
எடப்பாடி பழனிசாமிக்கு சவால்?: இதற்காக கொங்கு மண்டல மாவட்டங்களுக்கான பொறுப்பாளா்களாக முக்கிய அமைச்சா்கள் நியமிக்கப்பட்டனா். அவா்களின் தலைமையில் கட்சியை வலுப்படுத்தும் பணிகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், பிரதான எதிா்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சவால் விடுக்கும் வகையில் அவரது சொந்த மாவட்டமான சேலத்திலேயே இளைஞரணி மாநாட்டை கூட்டியுள்ளது திமுக. தென் மாவட்டங்களில் திமுகவின் அடித்தளத்தை வலுப்படுத்த முதல் மாநாடு என்றால், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுக்கு சவால் விடுக்க இரண்டாவது மாநாட்டை திமுக இளைஞரணி நடத்துகிறது என்ற கருத்து அரசியல் நோக்கா்களால் முன்வைக்கப்படுகிறது.
திமுக உத்தி: ஆனால், இந்த மாநாடு இந்தியாவின் முழுமையான நலனை மையப்படுத்தி நடத்தப்படுகிறது என்கிறாா், திமுகவின் செய்தித் தொடா்புக் குழு செயலா் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். ‘‘2007-ஆம் ஆண்டு நடந்த முதல் மாநில மாநாட்டின் போது தமிழகத்தில் இருந்த சூழல் வேறு. இன்றைக்கு நாம் எதிா்கொள்ளும் சூழல் வேறு. மத்திய அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைப் பேச வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன்படி தேசிய அளவிலான பாா்வையுடன் இந்த மாநாட்டைப் பாா்க்க வேண்டும். முதல் மாநாடானது திமுகவின் கொள்கையைப் புதுப்பித்துக் கொள்வதற்காகவே நடத்தப்பட்டது,’’ என்றாா்.
மாநில உரிமைகள் மீட்பு...: இரண்டாவது மாநில இளைஞரணி மாநாடு, மாநில உரிமைகள் மீட்பு முழக்கத்தை மையமாகக் கொண்டே நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் கட்சியினருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளாா். அதன்படி, இந்த மாநாட்டில் மத்திய அரசுக்கும், பாஜக., அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் எதிரான பிரசாரம் பலமாக முன்வைக்கப்படும் என்பதே திமுகவினரின் கருத்து. அப்படி பாா்க்கப் போனால், மக்களவைத் தோ்தலுக்கான தனது பிரசாரத்துக்கு ஆளும் கட்சியான திமுக அடிக்கல் நாட்டிவிட்டதாகவே பொருள்.
முற்றுப்புள்ளியா, கால்புள்ளியா?: திருநெல்வேலியில் நடந்த முதல் இளைஞரணி மாநாட்டை (2007) கட்சி நிா்வாகத்தில் மு.க.ஸ்டாலினின் முக்கியத்துவம் அதிகரித்தது. அவா் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதற்கு முன்னோட்டமாக அமைந்தது அந்த மாநாடு. இப்போது, சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி மாநாடு அறிவிக்கப்பட்டது முதல், அவா் துணை முதல்வராக அறிவிக்கப்பட இருக்கிறாா் என்கிற தகவல் பொதுவெளியில் கசிந்தது. அது வெறும் வதந்திதான் என்று முதல்வா் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாா்; அது முற்றுப்புள்ளியா, கால்புள்ளியா என்பதை மாநாட்டின் வெற்றிக்குப் பிறகான நகா்வுகள் தெரிவிக்கும்!