மதுரையில் கேலோ இந்தியா போட்டி: விளையாட்டு வீரர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு

தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் கட்கா விளையாட்டுப் போட்டி மதுரையில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கப்பட்டது.
மதுரையில் கேலோ இந்தியா போட்டி: விளையாட்டு வீரர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு

மதுரை: தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் கட்கா விளையாட்டுப் போட்டி மதுரையில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கப்பட்டது. அங்கு உணவுத் தட்டுப்பாட்டால் விளையாட்டு வீரர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில், கட்கா, கோ-கோ போட்டிகள் மதுரையில் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், கட்கா விளையாட்டுப் போட்டி ஜன. 21 முதல் ஜன. 23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, கேலோ இந்தியா கட்கா விளையாட்டுப் போட்டிகள் மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்து, போட்டிகளைத் தொடங்கி வைத்தார். 

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். சக்திவேல் மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டுக் கழக அலுவலர்கள் இதில் கலந்துக் கொண்டனர். 

தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பஞ்சாப், பிகார், அசாம், குஜராத், சண்டிகர் உள்பட 19 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே குழுப் போட்டிகள், தனி நபர் போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெறுகின்றன. 

உணவுத் தட்டுப்பாடு

போட்டி தொடங்கிய முதல் நாளே விளையாட்டு வீரர்களுக்குக் கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை காலை விளையாட்டு வீரர்கள் பெரும்பாலானோருக்கு ஒரு சப்பாத்தி, அரை முட்டை (வேக வைத்தது) மட்டுமே வழங்கப்பட்டது. 

இதுதொடர்பாக, வெளி மாநில விளையாட்டு வீரர்களிடம் கேட்டபோது, இதற்கு முன்பாக போட்டி நடைபெற்ற மாநிலங்களில் பல்வேறு வகையான உணவுகள், வீரர்களின் தேவைக்கேற்ப வழங்கப்படும். இதுபோன்று உணவின்றி வாடிய நிலை இதுவரை ஏற்பட்டதில்லை என்றனர். மேலும், சனிக்கிழமை பகல் உணவிலிருந்தே இந்த பற்றாக்குறை நீடிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மா.செள. சங்கீதாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, உணவு ஏற்பாடுகள் ஒரு தனியார் நிறுவனத்துக்கு நேரடியாக ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. எப்படியாயினும், விளையாட்டு வீரர்கள் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

மக்களவை உறுப்பினர் அதிர்ச்சி

இது தொடர்பாக, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசனிடம் கேட்டபோது, வீரர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்திய விளையாட்டு ஆணையம், உணவு வழங்கும் பணியைத் தனியார் வசம் ஒப்படைத்ததால் தான் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளேன். நிச்சயம் விரைவான தீர்வு கிடைக்கும் என்றார்.   

ஆட்சியர் அதிரடி

போட்டிகளைத் தொடங்கி வைத்த ஆட்சியர், அடுத்த சில நிமிடங்களில் உணவுத் தயாரிப்புக் கூடத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.  அங்கிருந்த உணவுகள் போதுமானதாக இல்லை என்பதையறிந்த அவர், உடனடியாக தொடர்புடைய ஒப்பந்த நிறுவன அலுவலர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது, எந்தக் காரணத்துக்காகவும், வீரர்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என அறிவுறுத்திய ஆட்சியர், உரிய ஏற்பாடுகளை செய்ய அந்த நிறுவன அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், தற்காலிக ஏற்பாடாக மாநகராட்சி நிர்வாகம் மூலம் உணவு வழங்கவும் அவர் நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com