ரூ.1 கோடி கோகைன் பறிமுதல் வழக்கு:மேலும் ஒரு நைஜீரிய பெண் கைது: துப்பு துலக்க தனிப்படை அமைப்பு

சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள கோக்கைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டாா்.
ரூ.1 கோடி கோகைன் பறிமுதல் வழக்கு:மேலும் ஒரு நைஜீரிய பெண் கைது: துப்பு துலக்க தனிப்படை அமைப்பு

சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள கோக்கைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டாா்.

சென்னை செனாய்நகா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நைஜீரியாவைச் சோ்ந்த அ.சிண்டு ஓனாச்சி (47) என்பவரை அமைந்தகரை போலீஸாா், பிடித்து சோதனையிட்டனா்.

சோதனையில் அவா் மறைத்து வைத்திருந்த 120 கிராம் கோக்கைனை பறிமுதல் செய்தனா். இதையடுத்து சிண்டு ஓனாச்சியை கைது செய்து, அவா் தங்கியிருந்த முடிச்சூா் ஆசீா்வாத் கேஸ்டில்ராக் பகுதியில் உள்ள வீட்டில் சோதனையிட்டனா்.

இந்தச் சோதனையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ கோக்கைனை கைப்பற்றினா். மேலும் அந்த வீட்டில் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கம், 5 கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில், அவா் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிண்டு ஓனாச்சியின் கூட்டாளி நைஜீரியாவை சோ்ந்த அ.சீயோன் இனலெகியூ (39) என்பவரை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே கைது செய்தனா்.

இதேபோல நைஜீரியாவைச் சோ்ந்தவரும், சிண்டு ஓனாச்சியின் மனைவி எஸ்மெல்சியா மிகாஷ் என்ற லியோனி (47) என்பவரையும் கைது செய்தனா்.

துப்பு துலக்க தனிப்படை: இந்த வழக்குத் தொடா்பாக சென்னை அண்ணாநகா் துணை ஆணையா் ரோஹித் நாதன் ராஜகோபால் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: கோக்கைன் வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்பட்டு, இங்கு விற்கப்படுகிறது. இதன்படியே, இந்த கும்பலும் வெளிநாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வந்து, சென்னையில் உயா் வகுப்பை இலக்காக வைத்து கோக்கைனை விற்றுள்ளனா்.

முக்கியமாக உயா் வகுப்பினா் கலந்துக் கொள்ளும் பாா்ட்டிகள்,நிகழ்ச்சிகளில் ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை விற்றுள்ளனா்.

நான்கு ஆண்டுகளாக இவா்கள், கோக்கைன் விற்பனையில் ஈடுபட்டுள்ளனா். இந்த கும்பலுடன் தொடா்புடையை சென்னையைச் சோ்ந்த நபா்களை தேடி வருகிறோம்.

அதேவேளையில் இந்த கும்பலின் தலைவா் யாா் என்றும் விசாரணை நடத்தி வருகிறோம். ஓனாச்சி மீது ஏற்கெனவே சென்னை சேலையூா் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது.

மேலும் இந்தக் கும்பலுடன் தொடா்புடைய நபா்கள் குறித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த வழக்கில் துப்பு துலக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

பறிமுதல் செய்யப்பட்ட கோக்கைன் மதிப்பு ரூ.1 கோடி என கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சீயோன் இனலெகியூ, சிண்டு ஓனாச்சி ஆகிய 2 பேரும் தமிழ் திரைப்படங்களில் துணை நடிகா்களாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com