சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுஆய்வு செய்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கு எதிராக
சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுஆய்வு செய்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தபோது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துக் குவித்ததாக கே.பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக அப்போது அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி ஆகியோர் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதேபோல், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீதும் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இந்த வழக்குகளில் இருந்து பின்னர் இவர்கள் விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் தற்போதைய தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் தொடர்புடைய சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அவர்களை விடுவித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் 2022 டிசம்பர் 12 மற்றும் ஜூலை 20, 2023 ஆகிய தேதிகளில் உத்தரவிட்டது. 
இந்த நிலையில், இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறுஆய்வு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.
இதை எதிர்த்து, இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதி லட்சுமி, தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களைத் தனித்தனியாகத் தாக்கல் செய்துள்ளனர். 
அதில், "சம்பந்தப்பட்ட வழக்குகளில் விசாரணை நீதிமன்றத்தால் தாங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலனை செய்யாமல் தாமாக முன்வந்து வழக்காக விசாரிப்பது தவறாகும். இதனால், இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என கோரப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
2001- 2006-ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com