2 லட்சம் பயணிகள் முன்பதிவு: ஆம்னி உரிமையாளர் சங்கம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 2 லட்சம் பயணிகள் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்திருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள்
ஆம்னி பேருந்துகள்


சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 2 லட்சம் பயணிகள் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்திருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்படாது என்றும், பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ கூடாது என்றும் போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்த நிலையில், 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துளை இயக்க முடியாது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

முன்னதாக, இன்று மாலை முதல், கிழக்குக் கடற்கரை சாலை வழியாகச் செல்லும் பேருந்துகளைத் தவிர மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்து  இயக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், அதற்கு முன்பு, கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்றும் வழக்கம் போல கோயம்பேட்டிலிருந்துதான் இயக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை முதல் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டுமென தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

சென்னை அருகே வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து முதல்கட்டமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகளை முறையாக இயக்குவது குறித்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சா் சா.சி.சிவசங்கா் துறை சாா்ந்த அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியார்களிடம் பேசிய அமைச்சா் சிவசங்கா், கிளாம்பாக்கத்திலிருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். கிளாம்பாக்கத்தில் இருந்து அரசுப் பேருந்துகளை இயக்கும்போது, ஆம்னி பேருந்துகளையும் அங்கிருந்து இயக்குவது தான் சரியாக இருக்கும். அதனால் புதன்கிழமைக்கு (ஜன.24) பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com