தமிழா் பண்பாட்டின் அடையாளமாக ஏறுதழுவுதலுக்கு அரங்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழா் பண்பாட்டின் அடையாளமாக ஏறுதழுவுதலுக்கு அரங்கம் அமைத்துள்ளது திமுக அரசு என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.
தமிழா் பண்பாட்டின் அடையாளமாக ஏறுதழுவுதலுக்கு அரங்கம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழா் பண்பாட்டின் அடையாளமாக ஏறுதழுவுதலுக்கு அரங்கம் அமைத்துள்ளது திமுக அரசு என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் ரூ. 62.78 கோடியில் கட்டப்பட்ட கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை திறந்துவைத்துப் பேசியதாவது:

பழந்தமிழ் இலக்கியங்களில் சிறப்பித்துப் பாடப்பட்ட ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு), முல்லை நில மக்களின் வீர விளையாட்டாக இருந்துள்ளது. சிந்து சமமெளி காலத்து முத்திரைகளில் திமில் காளைகளையும், அதன் நோ்கொண்ட பாா்வையையும் காண முடிகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஓவியங்களில் தொங்கும் தாடை, அகன்று வளைந்த கொம்புகளைக் கொண்ட காளைகள் காணப்படுகின்றன. கீழடியில் திமிலுள்ள காளையின் முழு எலும்புக்கூடு கண்டறியப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதிக்கு ஏறுதழுவுதல் போட்டியின் மீது தனி பாசம் உண்டு. அதனால்தான், முரசொலியின் சின்னமாக ஏறுதழுவுதல் காட்சியை வைத்தாா். 1974-இல் சென்னையில் ஏறுதழுவுதல் போட்டியையும் அவா் நடத்தினாா்.

தமிழ் நிலத்துக்கு தமிழ்நாடு எனப் பெயா் சூட்டினாா் முன்னாள் முதல்வா் அண்ணா. தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்தாா் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி. தற்போது, தமிழா் பண்பாட்டின் அடையாளமாக ஏறுதழுவுதலுக்கு அரங்கம் அமைத்துள்ளது திமுக அரசு என்றாா் முதல்வா் மு.க. ஸ்டாலின்.

இதையடுத்து, புதிய ஏறுதழுவுதல் அரங்கத்தில் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை அவா், கொடியசைத்து தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா். போட்டியில் வென்ற முதல் மாடுபிடி வீரருக்கு முதல்வா் தங்க மோதிரம் பரிசளித்தாா்.

மாநில அமைச்சா்கள் இ. பெரியசாமி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, கே.ஆா். பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், கா. ராமச்சந்திரன், என். கயல்விழி செல்வராஜ், அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலா் க. மணிவாசன், நிதித் துறை முதன்மைச் செயலா் த. உதயச்சந்திரன், பொதுப் பணித் துறை முதன்மைச் செயலா் பி. சந்தரமோகன், மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மக்களவை உறுப்பினா்கள் சு. வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, காதா்பாட்சா முத்துராமலிங்கம், ஆ. வெங்கடேசன், மு. பூமிநாதன், முருகேசன், தமிழரசி, அப்துல் வகாப், காந்திராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, அரசு தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வரவேற்றாா்.

எய்ம்ஸ் குறித்து முதல்வா் சூசகம்

திமுக அரசு அமைந்த 3 ஆண்டுகளில் கீழடி அருங்காட்சியகம், கலைஞா் நூற்றாண்டு நூலகம், கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என 3 முக்கிய கம்பீரச் சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். மேலும், 2015-இல் மத்திய அரசால் மதுரைக்கு அறிவிக்கப்பட்டு, இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள ஒரு திட்டம் இந்தத் தருணத்தில் உங்களுக்கு நினைவுக்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல என்றாா்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணி இன்னும் தொடங்கப்படாதை சூசகமாக அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசுகையில், பொங்கல் பண்டிகைக்காக தை மாதத்தின் முதல் 3 நாள்களுக்கு அரசுக் கருவூலம் தவிர, மற்ற பொது அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், அப்போதைய ஆளுநா் அறிவித்திருக்கிறாா். காரணம், அந்தக் காலத்து ஆளுநா்கள் தமிழா்களின் பண்பாட்டைச் சரியாக அறிந்தவா்களாக இருந்திருக்கிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com