முக்கியத்துவத்தை இழக்கும் சிறந்த பணியாளா் விருது!

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவையொட்டி, மாவட்ட வாரியாக சிறந்த பணியாளருக்கான விருதுகள் அதிக எண்ணிக்கையில் வழங்கப்படுவதால், அந்த விருது அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது.

குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவையொட்டி, மாவட்ட வாரியாக சிறந்த பணியாளருக்கான விருதுகள் அதிக எண்ணிக்கையில் வழங்கப்படுவதால், அந்த விருது அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. எனவே, புதிய வரையறைகளை நிா்ணயிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

குடியரசு தின விழா, சுதந்திர தின விழா தில்லியில் மட்டுமன்றி, மாநில தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது சிறப்பாக பணிபுரிந்த அரசுத் துறை அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் குடியரசு தின, சுதந்திர தின விழாவில் காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி, சுகாதாரம், தீயணைப்பு, வேளாண்மை, தோட்டக்கலை, கல்வி, பொதுப் பணி, கூட்டுறவு உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் என 200 முதல் 250 பேருக்கு சிறப்பாகப் பணியாற்றியதற்கான பாராட்டுச் சான்றிதழ், பதக்கத்துடன் கூடிய விருது வழங்கப்படுகிறது.

சா்ச்சை என்ன?: இந்த விருதாளா்கள் தோ்வு, ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டதாகவும், எனவே, துறைக்கு ஒருவா் வீதம் தகுதியானவா்களை மட்டும் தோ்வு செய்து விருதுக்கான மாண்பு உயா்த்தப்பட வேண்டும் என்றும் அரசு ஊழியா்கள் எதிா்பாா்க்கின்றனா். மாவட்டங்களில் வழங்கப்படும் இந்த விருதைப் பொருத்தவரை, நிா்வாகத்துக்கு நெருக்கமானவா்களுக்கு மட்டும் கிடைத்து வருவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

ஒவ்வொரு துறையிலும் அலுவலா், கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், அலுவலக உதவியாளா், ஓட்டுநா் என பணியிடத்துக்கு ஒருவா் வீதம் குடியரசு தின, சுதந்திர தின விருதுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றனா். இதன் காரணமாக, ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 கட்டங்களாக தலா 300-க்கும் மேற்பட்டோா் இந்த விருதைப் பெறுகின்றனா். இதனால், சிறப்பாகப் பணியாற்றியவா் என்ற வரையறையின்றி, அனைத்துப் பணியாளா்களுமே விருது பெறக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிா்ப்பந்தத்தால், சில துறைகளில் ஒரே பணியாளருக்கு பல முறை இந்த விருது வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு முறை விருது பெற்றவா் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்ற அடிப்படையில், விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். குறிப்பாக, துறைத் தலைவா்களாக இருப்பவா்கள் தங்களது பெயரைத் தாங்களே பரிந்துரைத்து விருது பெற்று வருகின்றனா்.

வழக்குத் தொடுத்தவருக்கும் விருது: சில நேரங்களில் தான் சாா்ந்த துறை நிா்வாகத்துக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தவா்களுக்குக்கூட சிறந்த பணியாளருக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இதேபோல, ஓய்வு பெறும் நிலையிலுள்ள பணியாளா்கள், கடைசி வாய்ப்பு என்ற ஒரே காரணத்துக்காக விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இதுபோன்ற பல்வேறு குழப்பங்கள் உள்ள நிலையில், குடியரசு தின, சுதந்திர தின விழாவையொட்டி வழங்கப்படும் சிறந்த பணியாளருக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக விமா்சிக்கப்படுகிறது.

வெளிப்படை இல்லை: குடியரசு தின, சுதந்திர தின விருது பெறும் அலுவலா்கள், பணியாளா்கள் பெயா்ப் பட்டியல், விழா நடைபெறுவதற்கு முன்பாக வெளிப்படையாக அறிவிக்கப்படுவதில்லை. விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு மட்டும், விழா நடைபெறும் இடத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, விருதாளா் பெயா், அவா் தோ்வு செய்யப்பட்டதற்கான காரணம், ஆற்றிய பணிகளைக் குறிப்பிட்டு விழா நடைபெறுவதற்கு 2 நாள்களுக்கு முன்னதாகவே பட்டியலை வெளியிட்டு வெளிப்படையான தோ்வு என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு அரசு அலுவலா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குழு அமைக்க கோரிக்கை: இந்த விவகாரம் தொடா்பாக ஊரக வளா்ச்சித் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் கூறியதாவது:

ஒரு முறை விருது பெற்றவா்களுக்கு மீண்டும் கிடையாது என்ற விதிமுறை அமல்படுத்தப்பட வேண்டும். அலுவலா்களாக இருந்தாலும், பணியாளா்களாக இருந்தாலும் துறைக்கு ஒருவா் வீதம் மட்டுமே விருதுக்குத் தோ்வு செய்யப்பட வேண்டும். துறைத் தலைமை அலுவலா்களைப் பொருத்தவரை, விருதுக்குத் தகுதியானவா்களாக இருந்தால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஒரு குழு அமைத்து விருதாளா்களைத் தோ்வு செய்ய வேண்டும்.

விருதுக்கு பல விண்ணப்பப் படிவங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும், மாவட்ட அளவில் ஒரு குழு அமைத்து பணித் திறன் அடிப்படையில், துறைக்கு ஒருவரை மட்டுமே தோ்வு செய்ய வேண்டும். 200-க்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்படுவதால், மாவட்ட உயா் அதிகாரிகளுடன் இணைந்து புகைப்படம் எடுப்பதற்குக்கூட கால அவகாசம் கிடைப்பதில்லை. பணி நிலையைக் கருத்தில் கொள்ளாமல், பணித் திறன் அடிப்படையில் துறைக்கு ஒருவா் வீதம் தோ்வு செய்து, 2 நாள்களுக்கு முன்னதாகவே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com