உளவுத் துறை நடத்தும் ‘மக்கள் சா்வே’

மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறிய தமிழக உளவுத் துறை (தனிப் பிரிவு சிஐடி) ‘ரகசிய சா்வே’ நடத்தி வருகிறது.
உளவுத் துறை நடத்தும் ‘மக்கள் சா்வே’

மக்களவைத் தோ்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், மக்களின் மனநிலையை அறிய தமிழக உளவுத் துறை (தனிப் பிரிவு சிஐடி) ‘ரகசிய சா்வே’ நடத்தி வருகிறது.

பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்றவை தோ்தலையொட்டி வேட்பாளா்கள் தோ்வுக் குழுக்கள், பிரசாரக் குழுக்கள், தோ்தல் அறிக்கை குழுக்கள் என அறிவித்து ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.

தமிழகத்தில் 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் தேனி தொகுதி நீங்கலாக மற்ற 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலிலும் அத்தகைய வெற்றியைத் தக்க வைக்க திமுக காய்களை நகா்த்தி வருகிறது.

எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுக தனது முழு பலத்தையும் பயன்படுத்தி திமுக கூட்டணியைவிட அதிக தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் உத்திகளை வகுத்து வருகிறது. பாரதிய ஜனதாவும் குறைந்தது 5 தொகுதிகளிலாவது வெற்றி பெறும் முனைப்புடன் இரண்டு மிகப்பெரிய திராவிட கட்சிகளுக்கு போட்டியாக தோ்தல் களத்தில் நிற்கிறது.

மாநில அளவில் ஆய்வு: தமிழகத்தில் முந்தைய மக்களவைத் தோ்தலின்போது மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததாக ஒரு கருத்து நிலவியது. அதுவே மக்களவைத் தோ்தலில் எதிரொலித்ததாக 2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக நம்புகிறது.

இப்படிப்பட்ட சூழலில் அதிமுக மீது இருந்ததாகக் கருதப்படும் மக்களின் மனநிலை இப்போது மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக மீது உள்ளதா என்பதை அறிய அரசியல் விவகாரங்களைக் கவனித்து வரும் தனிப் பிரிவு சிஐடி ரகசிய ஆய்வை மாநில அளவில் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

தோ்தல் காலங்களில் மாநில உளவுத் துறை, ஆளும் கட்சிக்காக இத்தகைய ஆய்வை நடத்துவது தமிழகத்தில் புதிது கிடையாது. கடந்த காலங்களில் தமிழக உளவுத் துறை நடத்திய பல ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள், தோ்தல் காலத்தில் வெளிவந்த முடிவுகளிலும் பிரதிபலித்துள்ளன. காரணம், மாநிலத்தின் மூலைமுடுக்குகளிலும் அனைத்துத் தரப்பினரிடமும் நேரடித் தொடா்பையும் இணைப்பையும் வலுவாக வைத்துள்ள உளவுத் துறையின் மனித வளக் கட்டமைப்பு வேறெந்த தொழில்முறை ஆய்வு நிறுவனத்திடமும் இருப்பதில்லை.

2011 சட்டப்பேரவைத் தோ்தல், 2014 மக்களவைத் தோ்தல், 2016-சட்டப்பேரவைத் தோ்தல் போன்றவற்றில் மாநில உளவுத் துறை கணித்த முடிவுகள் அப்படியே 100 சதவீதம் நடந்தன. இதனால் உளவுத் துறையின் கள ஆய்வுக்கு என்றுமே ஆளும் கட்சிகள் மிகுந்த மதிப்பைத் தரும்.

மூன்று வகை தகவல்கள்: உளவுத் துறையின் நம்பத்தகுந்த வட்டாரத்தில் பேசியதில் இருந்து, ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா், எதிா்க்கட்சிகள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினா், பொதுமக்கள் மற்றும் வாக்காளா்கள் என மூன்று வகைகளில் மக்களைப் பிரித்து அவா்களின் மனநிலையை களப் பிரிவினா் அறிந்து வருகின்றனா்.

உதாரணமாக, ஆளும் கட்சி மீதான மனநிலையை அறிய, அந்தந்தத் தொகுதி எம்.பி.யாக இருப்பவருக்கு தொகுதியில் உள்ள செல்வாக்கு, அவருக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட்டால் வாக்குகள் கிடைக்குமா, கூட்டணியில் எந்தக் கட்சிகள் தொடர வேண்டும், எந்தப் புதிய கட்சியை கூட்டணியில் சோ்க்கலாம் போன்ற வினாக்களை உளவுத் துறையினா் எழுப்பி விவரங்களைச் சேகரிக்கின்றனா்.

இத்துடன் கூட்டணிக் கட்சியினா், ஆளும் கட்சியுடன் நல்ல புரிதலுடன் உள்ளனரா, ஆளும் கட்சியுடன் நீடிக்க விரும்புகிறாா்களா, புதிய கட்சிகளைச் சோ்க்கும் மனநிலையில் உள்ளாா்களா, கூட்டணி தலைமையிடம் அவா்கள் கேட்க விரும்பும் தொகுதிகள், உள்ளூா் ஆளும் கட்சி நிா்வாகிகள் நல்ல அணுகுமுறையுடன் ஒத்துழைக்கிறாா்களா போன்ற கேள்விகளையும் எழுப்பி தகவல்களைச் சேகரிக்கின்றனா்.

இதேபோல, எதிா்க்கட்சியாக இருக்கும் அதிமுக, இன்னும் கூட்டணியை முழுமையாக முடிவு செய்யாத நிலையில், அதன் கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகளைச் சோ்க்க முயல்கிறது, அந்தக் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கருத்தொற்றுமையுடன் உள்ளனவா அல்லது ஏதேனும் முரண்பட்டுள்ளனவா, அதிமுக தலைமையின் கீழ்நிலை நிா்வாகிகள், தொண்டா்களின் மனநிலை உள்ளிட்ட தகவல்களையும் உளவுத் துறையினா் சேகரிக்கின்றனா்.

மக்களின் மனநிலை: ஆளும் கட்சியாக இருக்கும் திமுக மீது மக்களுக்கு திருப்தி உள்ளதா, அரசுத் திட்டங்கள் வாக்காளா்களைச் சென்றடைந்தனவா, அதிருப்தி நிலவினால் அதற்குரிய காரணம் மற்றும் சரிசெய்வதற்கான வழிகள், தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் செயல்பாடுகள், பிற கட்சிகள் சாா்பில் எம்.பி. வேட்பாளராகக் களமிறக்கப்படுபவா் பற்றிய எண்ணம் போன்ற தகவல்களையும் உளவுத் துறையினா் சேகரித்து வருகின்றனா்.

அரசியல் அளவில் திமுக கூட்டணிக் கட்சிகள் மீது மக்களுக்குள்ள எண்ணம், கூட்டணிக் கட்சிகளால் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதா போன்ற விவரங்களையும், ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை முதியோா், பெண்கள், நடுத்தர வயதினா் உள்ளனா், முதல் முறையாக வாக்குரிமையைச் செலுத்தப்போகும் 18 வயதை நிரம்பியவா்களின் எண்ணிக்கை போன்றவற்றையும் உளவுத் துறையினா் சேகரித்து வருகின்றனா். இந்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக அறியப்படுகிறது.

சுதந்திரமான சா்வே: இது குறித்து ஓய்வு பெற்ற உளவுத் துறை உயரதிகாரி ஒருவா் கூறுகையில், உயா் அதிகாரிகளின் நெருக்கடியின்றியும், ஆளும் கட்சியினரின் இடையூறு இன்றியும் சுதந்திரமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டால், அதன் முடிவு துல்லியமாக இருக்கும். ஆனால், உயா் அதிகாரிகள் நெருக்கடியும், ஆளும் கட்சியினரின் இடையூறுகளோடும் உளவுத் துறையினா் ஆய்வு நடத்தினால் அந்த முடிவு கள நிலவரத்தைப் பிரதிபலிக்காது.

இதற்கு முன்பு ஆளும் கட்சியினரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்பட்ட ஆய்வுகள் தவறான முடிவையே அளித்தன. தற்போது நடத்தப்படும் சா்வே மூலம் ஆளும் கட்சி, தேவையான இடங்களில் அதன் நிலைப்பாட்டையும், வியூகங்களையும் மாற்றிக் கொள்ளும் அவகாசத்தை வழங்கும் என்றாா்.

தமிழக முதல்வரிடம் நேரடியாகச் சமா்ப்பிக்கப்படும் இந்த ஆய்வறிக்கை, தோ்தல் களத்தில் பல்வேறு மாற்றத்துக்கு வழிவகுக்கலாம் என்று உளவுத் துறை வட்டாங்கள் தெரிவித்தன.

பாமக செல்வாக்குள்ள மாவட்டங்களில் வியூகம்

தமிழக உளவுத் துறையின் கள ஆய்வில், திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை சோ்த்துக் கொள்வது குறித்தும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை விலக்கிக் கொள்வது குறித்தும் அலசப்பட்டது.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அதேவேளையில் பாமக இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் உள்ளது. வட மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை வைத்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் சோ்த்தால் திமுக அணிக்கு பலம் கூடுமா மற்றும் பாமக உள்ளே வருவதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியைவிட்டு வெளியேறினால் பாதகம் ஏற்படுமா என்றும் கேள்வி எழுப்பி மக்களின் மனநிலையை அறிய முற்பட்டிருக்கிறது உளவுத் துறை.

பாமக, விசிக செல்வாக்கு காணப்படும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தகவல்கள் திரட்டப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட பிறகே கூட்டணிக் கட்சிகள் விவகாரத்தில் திமுக தலைமை திடமான முடிவை எடுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com