கூடுதல் விலைக்கு ஆம்னி பேருந்து டிக்கெட் விற்றால் நடவடிக்கை:அன்சுல் மிஸ்ரா எச்சரிக்கை

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு டிக்கெட்களை விற்பனை செய்யும் இடைத்தரகா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
கிளாம்பாக்கம்
கிளாம்பாக்கம்


சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு டிக்கெட்களை விற்பனை செய்யும் இடைத்தரகா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் கடந்த ஜன.24 முதல் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு மட்டும் 77 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு 5 நடைமேடைகளான நடைமேடை எண் 10,11,12,13 மற்றும் 14 ஆகிய நடைமேடைகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயணிகள் சுலபமாக செல்லக்கூடிய வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இதை தவிர 250 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இம்முனையத்திலேயே இயக்கப்படாத பேருந்து நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆம்னி பேருந்துகளில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள், முன்பதிவு மையங்கள் தவிர, விதிகளுக்கு புறம்பாக இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரப்பெற்றன. 

இதனைத் தொடர்ந்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில், சனிக்கிழமை(ஜன.27)மாலை, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய முதன்மை நிர்வாக அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. பார்த்தீபன், தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்.யுவராஜ் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது அனுமதியற்ற முறையில் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விற்பனை செய்த நபர்களிடமிருந்து டிக்கெட் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட நபர்களை விடுவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு, முதன்மை நிர்வாக அலுவலர்,டிஆர்ஓ ஜெ.பார்த்தீபன் தலைமையில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கையில், “ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு ஆன்லைன் மூலமாகவோ அல்லது பிரத்தியேக டிக்கெட் புக்கிங் கவுண்டர்கள் மூலமாகவோ மட்டுமே, டிக்கெட்டுகள் முன்பதிவுகள் செய்யப்படுகிறது, ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மூலமாக டிக்கெட் புத்தகங்கள் வைத்து பேருந்து நிலையங்களிலோ இதுபோன்று முன்பதிவு செய்யப்படுவதில்லை என்றும், அத்தகைய இடைத்தரகர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்” எனவும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

எனவே, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு சட்டவிரோதமாக கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் மீது காவல்துறை மூலமாக குற்றவியல் நடவடிக்கையும் மற்றும் கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக பயணிகளுக்கு இப்பேருந்து முனையத்தில் ஒலிபெருக்கி மூலமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com