மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

மக்களவைத் தேர்தலில் 350  தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற கல்விச் சிந்தனை கருத்தரங்கை தொடங்கிவைத்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற கல்விச் சிந்தனை கருத்தரங்கை தொடங்கிவைத்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்.

மக்களவைத் தேர்தலில் 350  தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்தார்.
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் இரு நாள்கள் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் புதன்கிழமை தொடங்கியது. 
கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா வரவேற்றுப் பேசினார்.
இந்தக் கருத்தரங்கின் முதல் நாளில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பங்கேற்றுப் பேசியதாவது: 
நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் கல்வியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடிந்தவற்றை செய்து வருகிறோம். விவசாயக் கழிவுகளை எரிக்காமல் எத்தனாலாக மாற்ற வேண்டும்.
எத்தனாலுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அடுத்த தலைமுறை கார்கள் எத்தனால் மற்றும் மின்சாரத்தில்தான் இருக்கும். நமது சாலைகளில் 70 சதவீதம் அளவுக்கு இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. நாம் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகிறோம். பசுமை எரிபொருளை நோக்கி மாறுவதற்கான பணியை நாங்கள் விரைவுபடுத்தியுள்ளோம்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவில்லை என்றால், பெட்ரோல் விலை லிட்டர் ரூ.250-ஆக அதிகரித்திருக்கும். உலக அளவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக கடந்த இரு ஆண்டுகளில் பெட்ரோல் விலை சரிந்தது இந்தியாவில் மட்டும்தான்.
நிகழாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 340 முதல் 350 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். மாநிலங்களவையில் எனது பதவிக் காலம் இன்னும் இருப்பதால், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசிக்கவில்லை என்றார் அவர்.
கேரள ஆளுநர் முகமது ஆரிஃப்கான்: தொடக்க விழாவுக்குப் பிறகு கேரள ஆளுநர் முகமது ஆரிஃப் கான் "மாநிலப் பல்கலைக்கழகங்களில் வேந்தர்களின் பங்கு' என்ற தலைப்பில் பேசியது: கல்வி அறிவைப் பெறுவதுடன் அதைப் பிறருக்குப் பகிர்வது அவசியம். நாம் கற்பதை முழு மனதுடன் உள்வாங்க வேண்டும். அதன்மூலம் மற்றவர்களுக்கு கற்பிப்பதில் அது வெளிப்படும். குழந்தைகளின் முதல் பிறப்பு பெற்றோரிடம் இருக்கலாம்; ஆனால், இரண்டாவது பிறப்பு ஆசிரியர்களிடம்தான் நடக்கிறது.
பல்கலைக்கழகங்களின் சுயாட்சி பாதுகாக்கப்பட வேண்டும். இதை உறுதி செய்வதற்கான ஒரே வழி துணைவேந்தரின் நியமனத்தில் இடையூறு இருக்கக் கூடாது என்றார்.
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்: பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் அதிகரித்திருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஏராளமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்து கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவுக்கு வாக்களித்த இளைஞர்களில் பலர் தற்போதுவரை வேலை இல்லாதவர்களாவே உள்ளனர்.
மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை தென்னிந்தியாவில் பாஜகவுக்கான இடங்கள் அதிகரிக்க வாய்ப்பில்லை. ஒட்டுமொத்த அளவில் பாஜக எதிர்பாராத அதிர்ச்சியைச் சந்திக்கும். அதேவேளையில் மக்களின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட "இந்தியா' கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறுவது உறுதி என்றார் அவர்.
இன்னசென்ட் திவ்யா: "மாணவர்கள் எதற்குத் தயாராக வேண்டும்?' என்ற தலைப்பில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று ஆய்வு அடிப்படையிலான படிப்புகளை அரசு ஊக்குவிக்கிறது. இதன்மூலம் படைப்பாற்றல், குழுவாகப் பணிபுரியும் திறன் போன்றவை தாமாகவே மாணவர்களிடம் மேம்படுகிறது. மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அதேவேளையில் அவர்கள் சவால்கள் இல்லாத சூழலில் இருந்து வெளியே வர முயற்சிக்க வேண்டும். மேலும், சூழலுக்கு ஏற்ற வகையில் தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர். 
மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு: "மக்களின் வாக்குகளை வெல்பவர்கள் யார்?' என்ற தலைப்பில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு பேசுகையில், தமிழகம், கேரளத்தில் தற்போது பாஜக பின்தங்கியுள்ளது. ஆனால், இன்னும் 6 அல்லது 7  ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் நடக்கும். 
தேசிய மகளிர் ஆணையத்துக்கு வரும் அதிக அளவிலான புகார்கள் பாஜக அல்லாத கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலிருந்து வருகின்றன என்றார்.
நிகழ்ச்சியில்,  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமிமேனன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா, 
ஆசிரியர் சந்த்வானாபட்டாச்சார்யா, சாஸ்த்ராபல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.வைத்யசுப்ரமணியம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாவது நாளான வியாழக்கிழமை (ஜன. 25) பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் சிறப்புரையாற்றவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com