சென்னை ஐஐடிக்கு ரூ. 110 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்

சென்னை ஐஐடியில் செய்யறிவு தொழில்நுட்பம் சார்ந்த பாடப் பிரிவுகளுக்காக ரூ.110 கோடியில் புதிதாக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடிக்கு ரூ. 110 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடியில்) தரவு அறிவியல் (டேட்டா சயின்ஸ்) மற்றும் செய்யறிவு தொழில்நுட்பம் (ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்) சார்ந்த பாடப்பிரிவுகளுக்கு என, ரூ. 110 கோடியில் புதிதாக கல்வி வளாகம் அமைக்கப்படுகிறது.

சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவரான சுநீல் வாத்வானி என்பவர் இதற்கான பெரும் பகுதி செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இதனையடுத்து புதிதாக அமையவுள்ள கல்வி வளாகத்திற்கு 'வாத்வானி ஸ்கூல் ஆஃப் டேட்டா சயின்ஸ் மற்றும் ஏஐ என அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன், இந்தியாவில் உள்ள எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் அங்கு கல்வி பயின்ற எந்தவொரு முன்னாள் மாணவரும் இவ்வளவு அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஐஐடியில் பயின்ற முன்னாள் மாணவரான சுநீல் வாத்வானி, ஐ-கேட் மற்றும் மாஸ்டெக் டிஜிட்டல் நிறுவனங்களின் இணை நிறுவனராக உள்ளார். இந்நிலையில், ஐஐடி ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில், சென்னை ஐஐடி இயக்குநர்  பேராசிரியர் வி. காமகோடி மற்றும் சுநீல் வாத்வானி இடையே  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து பேசிய சுநீல் வாத்வானி, ”உலகிலுள்ள முன்னணி செய்யறிவு தொழில்நுட்பம் சார்ந்த கல்வி வளாகங்களுள் ஒன்றாக விளங்குவதை இலக்காக கொண்டு  இந்த புதிய மையம் செயல்படும் என்றும், அரசு மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு, தரவு அறிவியல் மற்றும் செய்யறிவு சார்ந்த துறைகளில் தேவைப்படும் உதவிகளை இந்த மையம் வழங்கும்” என்று அவர் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com