
குடிமைப் பணிக்கு தேர்ச்சி பெறுவதற்கு சுய விமர்சனமும், நேர்மையும் இருக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலோக் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட கல்விச் சிந்தனை அரங்கு ஜன. 24ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை இருநாள்கள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் குடிமைப் பணி குறித்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலோக் ரஞ்சன், இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆல்பி ஜான் மற்றும் மனுஜ் ஜிண்டால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி அலோக் ரஞ்சன் பேசியது:
“குடிமைப் பணிகள் தேர்வு எழுத விரும்புவோர் முழுப் பாடத்திட்டங்களையும் படிக்கும் ஒழுக்கம் மாணவர்களிடம் இருக்க வேண்டும். உங்களைப் பற்றி நீங்களே சுய விமர்சனம் செய்து நேர்மையாக இருக்க வேண்டும்.
கடினமான தேர்வுகளில் ஒன்றாக இருக்கும் குடிமைப் பணிகள் தேர்வுக்காக குறைந்தபட்சம் ஓராண்டாக அர்ப்பணிக்க வேண்டும். இளைஞர்கள் நேரத்தை வீணடிக்காமல் பொருளாதாரத்தை முன்னகர்த்தும் வகையிலான பணி / தொழில்களை மேற்கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஆல்பி ஜான் பேசியது:
“குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் கதையை மட்டுமல்லாமல், தோல்வியுற்றவர்களின் கதையையும் கேட்க வேண்டும் என்பது எனது ஆலோசனை. அப்போதுதான் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் புரியும்.
குடிமைப் பணிகள் நாள்தோறும் சவால்கள் நிறைந்தவை. இலகுவான பணி அல்ல. ஒரு மாவட்டத்தை நிர்வாகிப்பது எளிதல்ல. இது மிகுந்த அழுத்தம் நிறைந்தது. அனைவருக்கும் பொதுவானவராக இருப்பதற்கு தனித்திறமை வேண்டும்.” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.