மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே நடத்தி முடித்த தனியார் பள்ளிகள்

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார், சுயநிதி பள்ளிகளில் விதிகளுக்குப் புறம்பாக தொடக்க நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே நடத்தி முடித்த தனியார் பள்ளிகள்

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார், சுயநிதி பள்ளிகளில் விதிகளுக்குப் புறம்பாக தொடக்க நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வியாண்டின் தொடக்க நாளான ஜூன் 1-ஆம் தேதியில் இருந்துதான் அரசுப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. ஆனால், தனியார் பள்ளிகள் அதற்கும் முன்பாகவே மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிடுவதால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதாகப் புகார் எழுந்தது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2018 முதல் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்தது. மேலும், தனியார் பள்ளிகளுக்குப் போட்டியாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏப்ரல் மாதமே அரசு தொடங்கியது. மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுப் பிரசாரமும் நடத்தப்பட்டது.
இதனால், சுதாரித்துக் கொண்ட தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே தொடங்கிவிட்டன. ஜனவரி மூன்றாவது வாரத்துக்குள் பெரும்பாலான பள்ளிகள் நுழைவு நிலை வகுப்புகளான எல்கேஜி, முதல் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட்டன.
இது குறித்து கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியின் மாணவர் சேர்க்கை அதிகாரி கூறியதாவது: மாணவர் சேர்க்கை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. எங்கள் பள்ளியில் எல்கேஜி வகுப்பில் ஒரு சில இடங்களே எஞ்சியுள்ளன. பல பள்ளிகள் முழுத் தொகையையும் இப்போதே பெற்றுக் கொள்கின்றன. சில பள்ளிகள் மட்டும் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு மாணவர் சேர்க்கையை உறுதி செய்து கொள்கின்றன. தாமதமாக வந்தால் இடம் கிடைக்காது என்ற அச்சத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முன்கூட்டியே பள்ளியில் சேர்த்துவிட விரும்பி, பல மாதங்களுக்கு முன்பிருந்தே அணுகி வந்ததால் வேறுவழியின்றி நாங்கள் மாணவர் சேர்க்கையை நடத்திவிட்டோம் என்றார்.
விதிமீறும் தனியார் கல்வி நிறுவனங்கள்: தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலர் கே.ஆர்.நந்தகுமார் கூறியதாவது: தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் மட்டும் முன்கூட்டியே மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவிடுகின்றன. அவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்தே கல்வியாண்டு தொடங்குவதை அதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லலாம்.
ஆனால், மெட்ரிக் பள்ளிகளைப் பொருத்தவரை பெரும்பாலும் மே மாதத்தில்தான் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. சில பள்ளிகள் வேண்டுமானால் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் முன்கூட்டியே மாணவர்களைச் சேர்த்திருக்கலாம். மாணவர் சேர்க்கை அறிவிப்பை அரசு வெளியிட்ட பிறகே சேர்க்கை தொடங்கப்பட வேண்டும். அதேநேரம் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை முன்கூட்டியே பள்ளிகளில் சேர்க்க விரும்பி எங்களை அணுகும்போது எங்களுக்கு வேறுவழியில்லை என்றார்.
இலவச, கட்டாயக் கல்வி  உரிமை சட்டம் (ஆர்டிஇ) 2009-இன்படி பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.
இந்த ஒதுக்கீட்டில் இடம் பெறும் குழந்தைகளுக்கு அரசுத் தரப்பில் இருந்து முறையாகப் பணம் வழங்கப்படுவதில்லை என்பதால், மாணவர் சேர்க்கையைத் தனியார் பள்ளிகள் மறுத்து வருகின்றன. அப்படியும் சேர்க்கை நடத்தப்படும் பல பள்ளிகளில், வழக்கமாக வசூலிக்கப்படும் தொகைக்கு நிகரான தொகையையே இந்தப் பெற்றோர்களிடம் பல்வேறு வழிகளில் வசூலித்துக் கொள்கின்றன.
தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் கூறுவதென்ன?: இது குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகி தங்கம் மூர்த்தி கூறியதாவது: ஆர்டிஇ பிரிவின் கீழ் எந்தப் பெற்றோர் விண்ணப்பித்திருக்கின்றனர் என்பது பள்ளிகளுக்கு முன்கூட்டியே தெரியாது. மேலும், அதிக விண்ணப்பங்கள் இருக்கும் பள்ளிகளில் கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையிலும், சில பள்ளிகளில் ஆட்சியர் முன்னிலையிலும்கூட குலுக்கல் நடத்தப்பட்டுத்தான் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனவே, இதில் தவறு நடைபெற வாய்ப்பு இல்லை.
அதேநேரம், தங்கள் பகுதியில் உள்ள புகழ்பெற்ற பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைச் சேர்க்க விரும்பி அந்தத் தனியார் பள்ளிகளைப் பெற்றோர் அணுகுகின்றனர். இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. கல்வியாண்டின் தொடக்கமான ஜூன் மாதம்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது என்றார்.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகி டி.எஸ்.தியாகராசன் கூறியதாவது: சென்னையில் எல்லா தனியார் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே நடைபெறுவதில்லை. இதேபோல மாநிலத்தின் பல பின்தங்கிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் தேடிச் சென்றுதான் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடிய நிலை உள்ளது. அதேபோலத்தான் ஆர்டிஇ பிரிவுக்கும் பிரபலமான பள்ளிகளில்தான் அதிக விண்ணப்பங்கள் இருக்கும். எங்களைப் போன்றவர்கள் நடத்தும் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் குறைவான விண்ணப்பங்களே வருகின்றன என்றார்.
சட்டமே நீர்த்துப் போகலாம்: முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நிறைவு செய்து கொள்வது 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற சட்டத்தையே நீர்த்துப்போகச் செய்வதாகவும், அதை அமல்படுத்த மறுப்பதற்கு சமம் என்றும் பொள்ளாச்சி மாணவர் கல்வி உரிமை கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே முடிக்கும் பள்ளிகள் ஆர்டிஇ சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பம் பெறும்போது, ஏற்கெனவே சேர்க்கை பெற்ற மாணவர்களுக்காக தாங்களே விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பித்துவிட்டு, அவர்களைக் குலுக்கலில் தேர்வு செய்ததாகக் காட்டிக் கொள்வதும் நடைபெறுகிறது. இப்படி பல பள்ளிகள் போலியாக ஆர்டிஇ மாணவர் சேர்க்கைக்கு கணக்குக் காட்டிக் கொள்கின்றன.
பொள்ளாச்சியில் ஒரு தனியார் பள்ளியில் பெற்றோரிடம் 3 ஆண்டுகளாக வழக்கமான கல்விக் கட்டணத்தை வசூலித்து வந்த தனியார் பள்ளி, அதே மாணவர் ஆர்டிஇ இடஒதுக்கீட்டில் படிப்பதாக கணக்கு காட்டி அரசிடமும் பணம் பெற்று வந்த அவலமும் நடைபெற்றுள்ளது என்கின்றனர் கூட்டமைப்பு நிர்வாகிகள்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளியிடம் கேட்டபோது, தனியார் பள்ளிகள் முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை நடத்த முடியாது. அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com