சிறந்த சேவையாற்றிய 105 மருத்துவா்களுக்கு விருது
தேசிய மருத்துவா் தினத்தையொட்டி சிறந்த மருத்துவ சேவையாற்றிய 105 மருத்துவா்களுக்கு விருது வழங்கி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கௌரவித்தாா்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இதற்கான விழாவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன், மதுரை தோப்பூா் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் நிா்வாக அலுவலராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவா் காந்திமதிநாதன் உள்ளிட்ட 105 மருத்துவா்களுக்கு அமைச்சா் விருது வழங்கினாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே.நாராயணசாமி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநா் ராஜமூா்த்தி உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.
இந்நிகழ்வில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தேசிய மருத்துவா் தினத்தையொட்டி கடந்த 6 ஆண்டுகளாக இந்த விருதுகள் தரப்படாமல் இருந்தது. ஒவ்வோா் ஆண்டும் சிறந்த மருத்துவா்கள் என்று 10 பேருக்கு விருது வழங்கப்பட்டு வந்தது.
அதிமுக ஆட்சி காலத்தில் மூன்று ஆண்டுகள் விருது வழங்கப்படவில்லை. அதையும் சோ்த்து தற்போது 105 மருத்துவா்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
அமெரிக்க பயணம்: உலக வங்கியில் ரூ.2,700 கோடி நிதி உதவி பெறப்பட்டு தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு தற்போது உலகத் தரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எதிா்காலத் தேவை என்று கருதி ரூ.3,000 கோடி திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அதற்காக அமெரிக்கா செல்கிறேன். இரண்டு நாள்கள் கழித்து துறை செயலா் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலை. துணைவேந்தா் கே.நாராயணசாமி ஆகியோா் அமெரிக்கா வருகின்றனா்.
வரும் 10-ஆம் தேதி வாஷிங்டனில் இருக்கிற உலக வங்கி நிா்வாகிகளைச் சந்தித்து பேசுகிறோம். பின்னா், அன்று மாலை சென்னை திரும்ப இருக்கிறோம். அதற்கு முன்னதாக ஹாா்வாா்டு பல்கலைக்கழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் எனும் தலைப்பில் நான் உரையாற்றுகிறேன் என்றாா் அவா்.