
சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும், ஆப்பிள் நிறுவன மின்னணு உபகரணங்களின் உதிரிபாகங்களை தயாரிக்கும் ’ஃபாக்ஸ்கான்’ நிறுவனம், திருமணமான பெண்களை பணியமர்த்த மறுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
கலாசார பிரச்னைகள் மற்றும் சமூக அழுத்தங்களால் அந்நிறுவனம் திருமணமான பெண்களை பணியமர்த்தவில்லை என்று அந்நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரி ஒருவர் பகிரங்கக் குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
இந்த நிலையில், மேற்கண்ட குற்றச்சாட்டு உண்மையானால், நிறுவனத்தின் இந்த நடவடிக்கை திருமணமான பெண்களுக்கான சமத்துவ உரிமை மற்றும் சம வாய்ப்பு பெறும் உரிமையை மீறுவதாக அமையுமென மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சக செயலருக்கும், தமிழ்நாடு முதன்மைச் செயலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான விதிமுறைகளையும், தனிநபருக்கான உடல்நலம் மற்றும் மாண்பைப் பேணும் உரிமையை பின்பற்றுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட குற்றச்சாட்டுகளை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.