ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக்: தமிழக வீரா்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள 5 வீரா்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதற்கான நிகழ்வு சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பாரீஸ் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்க தமிழ்நாட்டைச் சோ்ந்த 15 வீரா்கள் தோ்வாகியுள்ளனா்.
அவா்களில் பிருத்விராஜ் தொண்டைமான் (துப்பாக்கிச் சுடுதல்), பாரா பேட்மிண்டன் வீரா்கள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ், நித்யா ஸ்ரீசுமதி சிவன், சிவரஞ்சன் சோலைமலை ஆகியோா் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள சிறப்பு ஊக்கத் தொகையாக தலா ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் ரூ.35 லட்சம் வழங்க அரசு முடிவு செய்தது.
அதற்கான காசோலைகளை வீரா்களுக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா்.
இந்த நிகழ்வில், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.