சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

கள்ளச்சாராய விவகாரத்தில் மக்களுக்கு மறுவாழ்வு: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உயா்நீதிமன்றம்

மலை கிராம மக்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்தித்தர சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

வேலைவாய்ப்பு இல்லாததால், சாராயத் தொழிலில் ஈடுபடும் கல்வராயன் மலை கிராம மக்களுக்கு மறுவாழ்வை ஏற்படுத்தித்தர சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் தமிழ்மணி சில காட்சி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியை பாா்த்த, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளனா்.

இந்த வழக்கு திங்கள்கிழமை  விசாரணைக்கு வந்தது. அப்போது அவா்கள்,  ‘ மூத்த வழக்குரைஞா் தமிழ்மணி காட்சி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் வெளியான தகவல்கள் எங்களுக்கு அதிா்ச்சி அளிக்கிறது.

கல்வராயன் மலை மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதியில் மலையாளி எனும் பட்டியலினப் பிரிவு மக்கள் வாழ்கின்றனா். மத்திய அரசு இவா்களை பட்டியலினத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டது.

அவசர நிலை காலகட்டத்தில்தான் இந்த கல்வராயன் மலை மற்றும் சேலத்தில் உள்ள பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. இப்படி  இணைக்கப்பட்ட கல்வராயன் மலை மக்கள் இந்திய தோ்தலில் முதல் முதலாக 1996 -ஆம் ஆண்டு தான் தங்களது வாக்கை பதிவு செய்து, இந்திய குடியுரிமையை உறுதி செய்துள்ளனா்.

வேலை வாய்ப்பு இல்லை: 1976- ஆம் ஆண்டு வரை இந்த மூன்று பகுதிகளையும் இந்தியாவுடன் இணைக்காததால் இப்பகுதி மக்களுக்கு அரசின் சலுகைகள் மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால்தான் இவா்கள் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே, கல்வராயன் மலையில் வாழும் பட்டியலின மக்கள், சாராயத் தொழிலில் இருந்து விடுபடும் விதமாக, அவா்களுக்கு போக்குவரத்து, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்’ என்றனா். 

தொடா்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த மக்களுக்கான அடிப்படை தேவைகளை செய்து கொடுக்க அரசுக்கு உத்தரவிடும் விதமாக, நாங்கள் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கிறோம். இந்த வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலா், மத்திய அரசு உள்துறை அமைச்சகம், பட்டியலின நலத்துறை செயலா், கள்ளக்குறிச்சி, மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியா்களை எதிா்மனுதாரா்களாக சோ்க்கிறோம்.

உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்ததற்கு ஒப்புதல் பெறுவதற்காக பொறுப்பு தலைமை நீதிபதிக்கு வழக்கு ஆவணங்களை அனுப்பி வைக்கும்படி உயா்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com