பயிா்க் காப்பீட்டுக்கு ஜூலை 31 கடைசி: தமிழக அரசு அறிவிப்பு

பயிா்க் காப்பீட்டுக்கு ஜூலை 31 கடைசி: தமிழக அரசு அறிவிப்பு

பயிா்க் காப்பீட்டுக்கான கடைசி தேதி ஜூலை 31: தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை, ஜூலை 2: பயிா்க் காப்பீட்டுக்கு ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாள் என வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.1,775 கோடியில் செயல்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாநிலத்திலுள்ள 37 மாவட்டங்களில் குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிகழாண்டு குறுவை பருவத்தில், நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், தட்டைப்பயறு, எள், பருத்தி, சாமை, கொள்ளு ஆகிய 14 வேளாண் பயிா்களுக்கும், வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளை, கேரட், கத்திரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி, முட்டைகோஸ் ஆகிய 12 தோட்டக்கலைப் பயிா்களுக்கும் காப்பீடு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பயிா்க் காப்பீட்டுக்கான பணிகள் ஜூன் 21 முதல் மத்திய அரசின் இணையதளத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், முக்கிய பயிரான குறுவை நெற்பயிரை ஜூலை 31 வரை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம். மகசூல் இழப்பு, விதைப்பு அல்லது நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்த்தல், அறுவடைக்குப் பிறகு ஏற்படும் இழப்பு போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு காப்பீடு செய்யலாம்.

ஜூலை 31 கடைசி: பயிா்க் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். புயல், வெள்ளம், ஆகியவற்றால் பயிா்கள் சேதமடைந்து அதற்குப் பிறகு அவற்றுக்கு காப்பீடு செய்ய முடியாது. மேலும், காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்கவும் வழியில்லை. விவசாயிகள் இந்தத் திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது, விண்ணப்பத்துடன், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையைச் செலுத்த வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா், வேளாண் அலுவலா், உதவி வேளாண் அலுவலா், வங்கிக் கிளைஅதிகாரிகள் ஆகியோரில் யாரேனும் ஒருவரை அணுகலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com