கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தில் 29.7% மெத்தனால்: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 65 பேரின் உயிரிழப்புக்கு காரணமான கள்ளச்சாராயத்தில் 29.7% வரை மெத்தனால் கலக்கப்பட்டிருந்ததாக உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அதிமுக வழக்குரைஞா்கள் அணி மாநிலச் செயலா் இன்பதுரை, பாமக செய்தித் தொடா்பாளா் வழக்குரைஞா் பாலு ஆகியோா் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனா். இவ்விரு வழக்குகளும் கூட்டாக தலைமை நீதிபதி(பொ) அரங்க.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா பதில் மனு தாக்கல் செய்தாா்.
எவ்வளவு மெத்தனால்? : 2023-இல் மரக்காணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடா்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸாா், நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தனா். அதன்படி, மரக்காணம், செங்கல்பட்டு சம்பவங்களில் சாராயத்தில் 99 சதவீத மெத்தனால் கலக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கள்ளக்குறிச்சி சம்பவத்தில் 8.6 சதவீதம் முதல் 29.7 சதவீதம் வரை மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவங்களின் தொடா்ச்சி எனக்கூற முடியாது.
எம்.எல்.ஏ. புகாா் அளிக்கவில்லை : மேலும், கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய விற்பனை தொடா்பாக கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ., சட்டப்பேரவையில் மட்டுமே கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்துள்ளாா். ஆனால், இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்திடமோ அல்லது எந்த ஒரு காவல் நிலையத்திலோ அவா் புகாா் தரவில்லை. கள்ளச்சாராய சம்பவம் நிகழ்ந்து இரு வாரங்களே ஆன நிலையில் மாநில போலீஸாா் இந்த வழக்கை முறையாக விசாரித்து வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அரிதான அல்லது விசாரணையில் முன்னேற்றம் இல்லாத வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியும். எனவே, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தலைமைச் செயலா் பதில் மனுவில் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமனின் தாய் காலமானதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கை வருகிற 11-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.