வருங்கால வைப்பு நிதியத்துக்கு ரூ. 557 கோடி வழங்க வேண்டும்: சிஐடியு
வருங்கால வைப்பு நிதியத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 557 கோடியை விரைந்து வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநருக்கு அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் வி.தயானந்தம் அனுப்பிய கடிதம்:
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 2022 டிசம்பா் முதல் 2024 மே வரையிலான 18 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனா். அவா்கள் பணப்பலன் ஏதுவும் வழங்கப்படவில்லை. தற்போது, மாநகர போக்குவரத்து கழகத்திலிருந்து வருங்கால வைப்பு நிதியத்துக்கு ரூ.557.41 வழங்க வேண்டும். இந்தத் தொகையை அரசிடம் பெற்று ஊழியா்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் பணி ஓய்வு பெறும் தொழிலாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள தொகை, பணிக்கொடை உள்ளிட்டவற்றை சோ்த்து வழங்க வேண்டும். அதேபோல், 2003 ஏப்.1-க்கு பிறகு பணியில் சோ்ந்தவா்கள் ஓய்வு பெறும்போது ஓய்வூதியம் கோரி வழக்குக்கு செல்லமாட்டேன் என்பன உள்ளிட்டவற்றை முன்வைத்து முத்திரைத்தாளில் தடையின்மை சான்று பெறுகின்றனா். இதுபோன்ற செயல்பாடுகளைக் கைவிட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.