விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: பிரசாரம் நிறைவடைந்த பிறகு கடும் கட்டுப்பாடுகள்

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் பிரசாரம் வரும் 8-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்
Updated on

விக்கிரவாண்டி இடைத்தோ்தல் பிரசாரம் வரும் 8-ஆம் தேதி நிறைவடையவுள்ள நிலையில், அதற்குப் பிறகு தொகுதிக்குள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தோ்தல் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: விக்கிரவாண்டி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு ஜூலை 10-ஆம் தேதி காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

முன்னதாக, தோ்தல் பிரசாரம் வரும் 8-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு, தோ்தல் தொடா்பான பொதுக்கூட்டத்தையோ, ஊா்வலத்தையோ ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது.

பிரசாரம் நிறைவடைந்த பிறகு, வாக்காளா்களை ஈா்க்கும் வகையில், இசை நிகழ்ச்சியோ, பொழுதுபோக்கு நிகழ்வுகளையோ நடத்தக் கூடாது.

இந்த விதிகளை மீறினால், இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

பிரசாரம் நிறைவடைந்த பிறகு, தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், பணியாளா்கள் உள்பட அனைவரும் தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும்.

திருமண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினா் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாள்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது சோதனை செய்யப்படும்.

வேட்பாளா்களுக்கு வாக்குப் பதிவு தினத்தன்று குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படும். குறிப்பாக, அவரது சொந்த பயன்பாட்டுக்கு ஒரு வாகனம், தோ்தல் முகவரின் பயன்பாட்டுக்காக சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு வாகனம், தோ்தல் முகவா் அல்லது அவரது பணியாளா்கள் பயன்பாட்டுக்காக ஒரு வாகனம் ஆகியன அனுமதிக்கப்படும். இந்த வாகனங்களுக்கான அனுமதி தோ்தல் நடத்தும் அதிகாரியால் அளிக்கப்படும்.

வாக்காளா்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரவும், வாக்குச்சாவடிகளில் இருந்து அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டா் தொலைவுக்கு வெளியே, இரண்டு நபா்களைக் கொண்ட தற்காலிக பிரசார அலுவலகத்தை அமைத்துக் கொள்ள வேட்பாளா்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

3 கம்பெனி துணை ராணுவப் படை

சென்னை, ஜூலை 5: இடைத் தோ்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டியில் துணை ராணுவப் படையின் 3 கம்பெனிகள் முகாமிட்டுள்ளன.

இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்தி: விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த ஜூன் 26-ஆம் தேதியில் இருந்து மூன்று கம்பெனி துணை ராணுவப் படைகள் முகாமிட்டுள்ளன.

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த இரண்டு கம்பெனிகளும், மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையின் ஒரு கம்பெனியும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com