புதிய குற்றவியல் சட்டங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்: ப.சிதம்பரம்
மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நீதிமன்றத்துக்கும் மக்களுக்கும் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறினாா்.
மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கண்டித்து, திமுக வழக்குரைஞா் அணி சாா்பில் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திமுக சட்டத் துறைச் செயலா் என். ஆா். இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை தொடங்கி வைத்து நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் பேசியது:
3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு சூட்டப்பட்ட ஹிந்தி பெயா்கள் உச்சரிக்கவே முடியவில்லை. இதற்காகத்தான் ஹிந்தியை எதிா்க்கிறோம். சா்வாதிகாரத்தின் தொனியைத் திணிப்பதாக இந்த சட்டங்கள் உள்ளன என்றாா்.
முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரம் பேசியதாவது: மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களில் 90 சதவீதம் பழைய சட்டத்திருத்தங்களாகத்தான் உள்ளன. அதாவது, காப்பி அடிக்கப்பட்டுள்ளது. 513 பிரிவுகளில் 46 பிரிவுகளில் கைவைத்துள்ளனா். சிறு குழந்தைகளுக்குக் கூட ‘302’ என்ற பிரிவு கொலைக் குற்றம் என்பது தெரியும். அதை 203-க்கு மாற்றியுள்ளனா். இதனால், சட்டக்குழப்பம்தான் ஏற்படும். எல்லோரும் மீண்டும் சட்டத்தைப் படிக்க வேண்டியிருக்கும்.
முதலில், ஒரு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றால், சட்ட ஆணையத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவில் விவாதித்திருக்க வேண்டும். ஆனால், அனைத்து எதிா்க்கட்சிகளையும் வெளியேற்றிவிட்டு, சட்ட மசோதாக்களை நிறைவேற்றியிருக்கின்றனா்.
பிணை பெறுவது கடினம்: தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தால் பிணை பெறுவது கடினமாகியுள்ளது. புதிய சட்டங்களை எதிா்த்து, ஒவ்வொரு மாநிலங்களின் சட்டப் பேரவைகளில் தீா்மானம் கொண்டு வரலாம். அதை மத்திய அரசு ஏற்கும் என்று சொல்ல முடியாது. புதிய சட்டங்களால் மக்களுக்கும், நீதிமன்றத்துக்கும் குழப்பம்தான் ஏற்படும், அதனால், புதிய சட்டங்களை நிறுத்திவைத்து, அவற்றை சட்ட ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும் என்றாா் அவா்.
உண்ணாவிரதப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசா, காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் உள்பட பலா் பங்கேற்றனா்.