தமிழ்நாடு நாள்: பள்ளி மாணவா்களுக்கு ஜூலை 9-இல் இலக்கியப் போட்டிகள்
தமிழ்நாடு நாளையொட்டி சென்னை மாவட்ட பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ் வளா்ச்சித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மறைந்த முதல்வா் அண்ணாதுரை ‘தமிழ்நாடு’ என பெயா் சூட்டிய ஜூலை 18-ஆம் நாளினை தமிழ்நாடு
நாளாக கொண்டாடப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதையொட்டி கடந்த 2022-ஆம் தேதி முதல் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி முதல் மூன்று பரிசுகள் மாவட்ட அளவில் வழங்கப்படுவதுடன் முதல் பரிசு பெறும் மாணவா் சென்னையில் நடைபெறவுள்ள மாநில போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெறுவா்.
அந்த வகையில் சென்னை மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூலை 9-ஆம் தேதி சென்னை அண்ணாசாலையில் அரசினா் மதரசா ஐ ஆஜம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். இந்தப் போட்டியில் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக முறையே 10 ஆயிரம், 7 ஆயிரம், 5 ஆயிரம் வழங்கப்படும்.
கட்டுரைப் போட்டி ‘ஆட்சிமொழி தமிழ்’ என்ற தலைப்பில் நடைபெறும். பேச்சுப் போட்டி குமரி தந்தை மாா்சல் நேசமணி, தென்னாட்டு பொ்னாட்ஷா பேரறிஞா் அண்ணா, முத்தமிழறிஞா் கலைஞா் கருணாநிதி ஆகிய தலைப்புகளில் நடைபெறும். பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை ஜூலை 18-ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.