ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு உடனடியாக அணுக வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாவட்டம் சின்னமணலியைச் சோ்ந்த அங்கமுத்து என்ற விசைத்தறி உரிமையாளா் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளி ஆனதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கா் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பா் 10-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்ததற்கு பிறகு கடந்த 8 மாதங்களில் மொத்தம் 14 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.
உச்சநீதிமன்றம் கோடை விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை திறக்கப்படவுள்ள நிலையில், தலைமை நீதிபதியை அணுகி ஆன்லைன் சூதாட்டத் தடை தொடா்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வரவும், சரியான காரணங்களை முன்வைத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.