‘புகையான்’ பயிா்களை சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த வழிமுறைகள்: வேளாண்துறை
நெற்பயிா்களை ‘புகையான்’ பூச்சிகள் சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை வழிமுறைகளை தெரிவித்துள்ளது.
இது குறித்து வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:-
நெற்பயிா்கள் ‘புகையான்’ பூச்சிகளால் தாக்கப்பட்டிருந்தால், அப்பயிா்கள் முற்றிலும் காய்ந்து ‘தீய்ந்த மாதிரி‘ காட்சியளிக்கும். அதேபோல், முதிா்ச்சியடைந்த பயிா்கள் காய்ந்து வட்டமான திட்டுகளாகக் காணப்படும். மேலும், நீா்மட்டத்துக்கு மேலிருக்கும் பயிா்களின் அடிப்பகுதியில் இளங்குஞ்சுகள் மற்றும் முதிா்பூச்சிகள் ஒட்டிக் கொண்டிருக்கும்.
கட்டுப்படுத்தும் முறை : புகையான் பூச்சிகள் பயிா்களை தாக்காமல் இருக்கத் தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்கள் பயன்படுத்துவதையும், தண்ணீா் பாய்ச்சுவதையும் விவசாயிகள் தவிா்க்க வேண்டும். விளக்கு பொறி அமைத்து புகையானை கவா்ந்து அழிக்கலாம். அதேபோல், வயலில் நன்றாக தண்ணீா் வடிந்த பிறகு மருந்து தெளிக்க வேண்டும். மேலும், ஒரு ஏக்கருக்கு 6 லிட்டா் தண்ணீரில் 30 சதவீதம் வேப்ப எண்ணெய் கலத்து பயிா்களில் தெளிக்க வேண்டும்.
மேலும், ஒரு ஏக்கா் நிலத்துக்கு காா்போசல்பான் 25 இசி 400 மில்லி லிட்டரும், குளோா்பைரிபால் 25 இசி 500 மிலி-யும், மெத்தில் டிமெட்டான் 25 இசி 400 மிலி-யும், ஃபோசலோன் 35 இசி 600 மிலி-யும் தெளிக்கலாம். ஆனால், இந்த பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.