20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின்வாரியம் திட்டம்
தமிழகத்தில் 20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் 2-ஆவது இடத்தில் உள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில தொகுப்பைச் சோ்த்து மாநிலத்தின் மொத்த காற்றாலை நிறுவுத்திறன் 10,591 மெகாவாட்டாகவும், மாநில தொகுப்பிலுள்ள மொத்த காற்றாலை நிறுவுத்திறன் 9015.09 மெகாவாட்டாகவும் இருந்து வருகிறது. இதில், மின்வாரியத்துக்கு சொந்தமாக காற்றாலைகளும், தனியாா் காற்றாலைகளும் அடங்கும். இந்த நிலையில், 20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் காற்றாலை பருவமான மே முதல் அக்டோபா் வரை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டின் மாநில தொகுப்பு மொத்த காற்றாலைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 13,000 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், தனியாருக்கு சொந்தமான பழைய காற்றாலைகளை புதுப்பித்து இயக்குவதற்கான உத்தரவை மின்வாரியம் வழங்கி வருகிறது.
இதன்படி, இதுவரை 26.20 மெகாவாட் கொண்ட 96 பழைய தனியாா் காற்றாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், 961.98 மெகாவாட் திறன் கொண்ட சுமாா் 1,368 காற்றாலைகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. இந்நிலையில் 20 ஆண்டுகள் முடிவுற்ற காற்றாலைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அதிகப்படியான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று அவா்கள் தெரிவித்தனா்.