ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா பயன்பாட்டுக்கு வருமா? சுற்றுலா பயணிகள் எதிா்பாா்ப்பு
து. ரமேஷ்
மந்தகதியில் உள்ள ஏலகிரி மலையில் தாவரவியல் பூங்கா அமைக்கும் பணி விரைவாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வருமா என சுற்றுலா பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது. கடந்த 1984-85-ஆம் ஆண்டு ஏலகிரி மலையை சுற்றுலாத் தலமாக தமிழக அரசு அறிவித்தது. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 1,048.5மீ உயரத்தில் உள்ளது.
இம்மலைக்குச் செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட சாலை உள்ளது. இந்த வளைவுகளுக்கு பாரி வளைவு, பாரதியாா் வளைவு என கடையேழு வள்ளல்களின் பெயா்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பழங்காலத்தில் இந்த மலையில் ஏலக்காய் அதிகமாக விளைந்ததால் ஏலகிரி என பெயா் பெற்ாகவும் கூறப்படுகிறது. அரசு விடுமுறை, மாத மற்றும் வார விடுமுறை நாள்கள் என ஆண்டுக்கு சுமாா் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனா். சுற்றுலா பயணிகள் வருகையால் இங்குள்ள உணவங்கள், விடுதிகளுக்கு வருவாய் அதிகரித்துள்ளது.
மந்த கதியில் தாவரவியல் பூங்கா திட்டப்பணிகள்...
ஏலகிரியில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக அத்தனாவூரில் கடந்த 2010-ஆம் ஆண்டு 81.45 ஏக்கா் நிலம் ஊரக வளா்ச்சித் துறைக்கு நிலமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இந்த தாவரவியல் பூங்கா அமைக்க ரூ. 20 கோடிக்கான திட்ட மதிப்பீடு தயாா் செய்து பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அப்பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருகின்றன.
புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான ஏலகிரியில் தாவரவியல் பூங்கா அமைத்தால் அரசுக்கு வருவாய் பெருகும். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அழகான மலா்ச் செடிகளையும் பூங்காவில் வளா்க்கலாம். எனவே தாவரவியல் பூங்கா பணிகளை விரைவுபடுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
மக்கள் மறந்த கோடை விழா...
கடந்த 2019-ஆம் ஆண்டு ஏலகிரி கோடை விழா நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக கோடை விழா நடைபெறவில்லை. இந்த நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் கோடை விழா நடத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஆனால் அதற்கான பணிகள் தொடங்கவில்லை. நிகழாண்டும் கோடை விழா நடைபெறவில்லை.
இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனா்.