என்எல்சி சுரங்கத்தில் விபத்து: ஒப்பந்த தொழிலாளி உயிரிழப்பு
நெய்வேலியிலுள்ள என்எல்சி சுரங்கத்தில் பெல்ட்டில் சிக்கிய விபத்தில் அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார்.
என்எல்சி ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் அன்பழகன். இந்த நிலையில், இன்று(ஜூலை 8) காலை, அவர் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தில் கன்வேயர் இயந்திரத்தின் பெல்ட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பெல்ட்டில் சிக்கி அன்பழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில், விபத்து குறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினரும் உறவினர்களும் இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்டதுடன், உயிரிழந்த அன்பழகனின் மரணத்துக்கு நீதி கேட்டு அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
உரிய பாதுகாப்பின்றி ஒப்பந்த தொழிலாளர் பணியாற்றியதே விபத்துக்கான காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை என்எல்சி நிர்வாகம் தரப்பு மறுத்துள்ள நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து என்எல்சி அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.