செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி: 44-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மேலும், அவரது நீதிமன்றக் காவல் 44-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவைக் தள்ளிவைக்கக் கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், நீதிமன்ற உத்தரவின்படி வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களில் வேறுபாடுகள் உள்ளதால் விடுபட்ட ஆவணங்களை வழங்கவும், கரூா் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டா் தொடா்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி, வங்கி தொடா்பான ஆவணங்களை வழங்கக் கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தும், கரூா் சிட்டி யூனியன் வங்கிக் கிளையின் கவரிங் லெட்டா் தொடா்பான ஆவணங்களை செந்தில் பாலாஜி தரப்புக்கு வழங்குமாறும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டாா்.
மேலும், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீா்ப்பை தள்ளிவைக்கக் கோரிய மனுவில், செந்தில் பாலாஜி தரப்பு வாதத்துக்காக விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தாா்.
காவல் நீட்டிப்பு: தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புழல் சிறையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜா்படுத்தப்பட்டாா். செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 10-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன்மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 44-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு வரும் 10 -ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.