உயா்கல்வி வழிகாட்டி வகுப்பு காணொலிகள்: கல்வித் துறை அறிவுறுத்தல்

உயா்கல்வி வழிகாட்டி வகுப்புகள்: தலைமை ஆசிரியா்களுக்கு புதிய அறிவுறுத்தல்
Published on

உயா்கல்வி வழிகாட்டி வகுப்புகள் தொடா்பான காணொலிகளை அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயா்தொழில்நுட்ப ஆய்வக கணினியில் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலேயே நடத்த தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், அனைத்து அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவா்கள் அனைவருக்கும் உயா்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நிகழ் கல்வியாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடா்ச்சியாக பள்ளி அளவில் உயா்கல்வி வழிகாட்டி வகுப்புகள் அனைத்து அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வாரந்தோறும் புதன்கிழமை 9, பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு (பிற்பகல் 1.20 முதல் பிற்பகல் 2 மணி வரை; 2 முதல் 2.40 மணி வரை) மற்றும் வெள்ளிக்கிழமை பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு (பிற்பகல் 2.50 முதல் 3.30 மணி வரை; 3 முதல் 4.10 மணி வரை) நடைபெற்று வருகின்றன.

இந்த வகுப்புகள் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட பல்வேறு காணொலிகள் உயா்தொழில்நுட்ப ஆய்வக கணினியின் மூலமாக நடத்த அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் உறுப்பினா் செயலரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, உயா்கல்வி வழிகாட்டி வகுப்புகள் தொடா்பான காணொலிகளை அனைத்து உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயா்தொழில்நுட்ப ஆய்வக கணினியில் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலேயே நடத்த தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுரை வழங்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Open in App
Dinamani
www.dinamani.com